Published : 17 Feb 2019 10:05 AM
Last Updated : 17 Feb 2019 10:05 AM
காஷ்மீரில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குறித்த நினைவுகளுடன் சவலாப் பேரி கிராமமே கண்ணீரில் தத்தளிக்கிறது.
கோவில்பட்டி அருகேயுள்ள இக்கிராமத்துக்கு சுப்பிரமணியன் உடல் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சவலாப்பேரி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்தெல்லாம் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். கண்ணீர் மல்க அவர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அண்ணன் உருக்கம்
சுப்பிரமணியனின் சகோதரர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘நான் துபாயில் பணியில் இருந்தபோது, எனக்கு முகநூலில் ஜம்முகாஷ்மீரில் தற்கொலைப் படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி விட்டனர் என தகவல் கிடைத்தது.
எனது தம்பியுடன் பணியாற்றும் எங்களது ஊரை சேர்ந்த பெரியதுரை என்பவரை தொடர்பு கொண்ட போது, சுப்பிரமணியன் கான்வாயில் சென்ற வாகனங்கள் மீதுதான் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவித்தார். இதனால் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. மறுநாள்தான் அவர் இறந்ததை உறுதி செய்தோம். உடனடியாக நான் ஊருக்கு புறப்பட்டு வந்து விட்டேன்’’ என்றார்.
விளையாட்டில் ஆர்வம்
சவலாப்பேரியை சேர்ந்த பி.ராஜா பெரியசாமி கூறும்போது, ‘‘சுப்பிரமணியனுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். எங்கள் ஊரில் `சவலை கிங்ஸ்’ என்ற பெயரில் 3 கபடி அணிகள் உள்ளன. இந்த கபடி அணிகளை உருவாக்கியதே அவர்தான்’’ என்றார்.
சிஆர்பிஎப் வீரர்
சவலாப்பேரியை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் என்.ராம்குமார் கூறும்போது, ‘‘மேகலாயாவில் 120-வது பட்டாலியனில் வேலை பார்த்து வருகிறேன். நான் இந்த வேலையில் சேர எனக்கு பயிற்சி அளித்தது சுப்பிரமணியன் அண்ணன் தான். பணிக்கு சென்ற பிறகும் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார். ‘‘பாதுகாப்பு பணியின் போது பகலை விட இரவில் இரண்டு மடங்கு கவனமாக இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்துவார். அவர் இறந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை. அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே விடுமுறையில் வந்துள்ளேன்’’ என்றார்.
இதுபோல், சவலாப்பேரி கிராமத்தில் உள்ள பலரும் சுப்பிரமணியனின் நீங்காத நினைவுகளுடன் சோகத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT