Last Updated : 14 Feb, 2019 11:23 AM

 

Published : 14 Feb 2019 11:23 AM
Last Updated : 14 Feb 2019 11:23 AM

10 ஆண்டுகளாக உணவளித்து சேவை: தெரு நாய்களின் பசிபோக்கும் நெல்லை தம்பதி

திருநெல்வேலியைச் சேர்ந்த தம்பதிகடந்த 10 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர்.

திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரன் நகரில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி வள்ளி. இவர்கள் நடத்திவரும் ஜெராக்ஸ் கடை, டவுன்பகுதியில் உள்ளது. பகலில் கடையில் பணிபுரியும் இவர்கள், இரவு 8 மணியானதும் தெருநாய்களுக்கு உணவளிக்க கிளம்பிவிடு கின்றனர்.

பேக்கரிகளில் வாங்கிவந்த கேக்குகளை காகிதங்களில் பொட்டலமாக பொதிந்து வைத்துக் கொண்டு இரவு 1 மணி வரை டவுன் நான்கு ரத வீதிகள், டவுன் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் ஸ்ரீபுரம், சிவசக்தி திரையரங்கம் ,டவுன் நயினார்குளம், திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் நாய்களுக்கு மத்தியில் அந்தபொட்டலங்களை வீசிவிட்டு செல்கின்றனர். பொட்டலங்களில் உள்ள கேக்குகள் உள்ளிட்ட உணவுபண்டங்களை நாய்கள் சாப்பிட்டு பசியாறுகின்றன. தம்பதியின் இருசக்கர வாகனம் வந்ததும் தெரு நாய்கள் இவர்களின் முன் ஓடி வருகின்றன.

கடன்வாங்கி சேவை

மாற்றுத்திறனாளியான வள்ளி கூறும்போது, “ தொடக்கத்தில் எங்கள் கடை அருகில் ஒரு நாய்க்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தோம். பின் அதனோடு சில நாய்கள் எங்களை தேடி வர ஆரம்பித்தன. அவற்றுக்கும் உணவளித்தோம். தற்போது 200 தெருநாய்களுக்கும் மேல் தினமும் உணவளிக்கிறோம்.

எங்களது ஜெராக்ஸ் கடையில் பல சமயங்களில் 200 ரூபாய்க்கும் குறைவாகத் தான் வருமானம் வரும். அந்த சமயத்தில் கேக்வாங்க சிரமப்படுவோம். ஆனாலும்,கடன் வாங்கியாவது கேக்குகளை வாங்கி வழங்கி வருகிறோம்” என்றார்.

ஸ்பெஷல் சாப்பாடு

பாலசுப்பிரமணியன் கூறும் போது, “மாலை 4 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பேக்கரிக்கு செல்வேன். அங்கு மிஞ்சிய கேக்குகளை எடைபோட்டு தருவார்கள். அதற்கு ரூ.200 வாங்கிக் கொள்வார்கள். இரவு 10 மணியளவில் கேக்குகளை எடுத்துச்சென்று தெருநாய்களுக்கு விநியோகிப்போம்.

தெருநாய்கள் காயத்துடன் இருந்தால் அவற்றுக்கு மருந்து அளிக்கிறோம். நாய்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக, கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் எந்த ஊருக்கும் செல்வதில்லை. தீபாவளி, பொங்கல் சமயங்களில் நாய்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் சாப்பாடு தருவோம்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x