Published : 16 Feb 2019 08:49 AM
Last Updated : 16 Feb 2019 08:49 AM

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஸ்மார்ட் குப்பை தொட்டிகளை இலவசமாக நிறுவ திட்டம் இடங்களை தேர்வு செய்வதில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீவிரம்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகளை இலவசமாக நிறுவ தனியார் நிறுவனம் முன்வந்திருப்பதால், அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டு வருகிறது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கிவீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது. ஆனால், அத்தியாவசிய பயன்பாடு என்பதால் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு அரசு தடை விதிக்கவில்லை. அதே நேரத்தில் இவற்றை தூக்கி வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நவீன ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகளை வைக்க திட்டமிட்டுள்ளது.

அதற்கு உள்ளே பிளாஸ்டிக் பாட்டில்கள், அலுமினிய டின்களை போடும்போது, பல்வேறு சேவை நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் கட்டண சலுகை அளிக்கும் கூப்பன்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்களை பல்வேறு இடங்களில் நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையில், அந்த இயந்திரத்தின் பயன்பாட்டை முதல்வர் கே.பழனிசாமி அண்மையில் தொடங்கிவைத்தார். இதை மக்கள் அதிகம்கூடும் இடங்களில் வைக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை அறிவுறுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் தூக்கி எறியப்படுவதை தடுப்பதற்காக ஸ்மார்ட் குப்பைத்தொட்டி இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இயந்திரத்தை பொது மக்கள் அதிகம்கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், வணிக வளாகங்களில் வைக்க திட்டமிட்டிருக்கிறோம். அது தொடர்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கடிதம் எழுத இருக்கிறோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களையும் தேர்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இயந்திரத்தின் செயல்பாடு குறித்து, இயந்திரம் வழங்கும் நிறுவன இயக்குநர் ஜெ.பி.அலெக்ஸ் கூறியதாவது:

இந்த இயந்திரத்தில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 500 பாட்டில்கள் அல்லது குளிர்பான டின்களை போட முடியும். அவை நசுக்கப்பட்டு, இயந்திரத்துக்குள்ளேயே சேமிக்கப்படும். நிரம்பிய பின், மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்கப்படும். இதில்பாட்டிலை போடும்போது, உங்களுக்கு எந்த நிறுவனத்தில் கட்டணசலுகை வேண்டும் என கேட்கும். அதை தேர்வு செய்தவுடன் அந்தநிறுவன சேவையை சலுகைகட்டணத்தில் பெறுவதற்கான கூப்பன் கிடைக்கும். அதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தில் உணவகங்கள், விற்பனை நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள்உள்ளிட்ட பல்வேறு சேவை வழங்கும் நிறுவனங்கள் எங்களோடு இணைந்து வருகின்றன. அதற்கான கூப்பனை தேர்வுசெய்து பொதுமக்கள் பயன்பெறலாம்.

முதற்கட்டமாக கோயம்பேடு புறநகர் பேருந்துநிலையம், மெரினா கடற்கரை, 4 வணிகவளாகங்கள் உள்ளிட்ட 15 இடங்களில் இந்தஇயந்திரத்தை வைக்க திட்டமிட்டிருக்கிறோம். அனைத்து இடங் களையும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து தேர்வு செய்து அதில் இயந்திரங்களை இலவசமாக வைக்க உள்ளோம். இந்த இயந்திரங்கள் மூலம் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையை தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x