Published : 08 Feb 2019 08:16 AM
Last Updated : 08 Feb 2019 08:16 AM
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம் நேற்றுடன் முடிவடைந்தது. எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் 11-ம் தேதி காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் 15-ம் தேதி உத்தரவிட்டது. ஆலையை இயக்க 25 நிபந்தனைகளையும் விதித்தது. தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுபோல், ஆலையைத் திறக்க உடனடியாக அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
கடந்த மாதம் 24-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் வாதம் நடைபெற்று வந்தது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.
வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், வேதாந்தா குழுமம் சார்பில் சி.ஆரியமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வைகோ வாதம்
நீதிபதிகள் பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதிட்டதாவது:சுற்றுசூழல் பாதுகாப்பு கட்டுப்பாட்டு விதிகளின்படி 391 டன் உற்பத்தி செய்தால் 60 மீட்டர் உயரம் கொண்ட ஒரு புகைபோக்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் 1,200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் 60 மீட்டர் உயரம் கொண்ட ஒரே ஒரு புகைபோக்கி தான் உள்ளது.
மற்ற புகைபோக்கிகள் வேறுவகை அமிலங்கள் வெளியேற வைக்கப்பட்டுள்ளன.
புகைபோக்கி உயரத்துக்கு ஏற்றவாறுதான் உற்பத்தி நடைபெற வேண்டும். அவ்வாறு பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலை 391 டன்னுக்கு மேல் தாமிரத்தை உற்பத்தி செய்யக்கூடாது. ஆனால், விதியை மீறி தாமிரத்தை அதிகம் உற்பத்தி செய்துள்ளது.
பல ஆண்டுகளாக ஒரே புகைபோக்கியை வைத்து பலவகை வாயுக்களை ஒன்றாக வெளியேற்றி மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவித்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தெரிவித்தார்.
தீர்ப்பு தள்ளிவைப்பு
இத்துடன் வழக்கறிஞர்கள் வாதம் முடிவடைந்தது. இது தொடர்பாக ஏதாவது எழுத்துப்பூர்வமான வாதங்கள் இருந்தால், அதனை பிப்ரவரி 11-ம் தேதி காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யலாம் எனக் கூறி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT