Published : 12 Sep 2014 01:53 PM
Last Updated : 12 Sep 2014 01:53 PM

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

பழநியில் வியாழக்கிழமை போலீஸாருக்கு தகவல் அளித்து கடைசி நேரத்தில் திருமணத்தை மணப்பெண் நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

சென்னையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி பெண்ணுக்கு பழநியில் வியாழக்கிழமை காலை திருமணம் நடக்கவிருந்தது. முன்னதாக, புதன் கிழமை இரவு பழநி சன்னதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், வியாழக் கிழமை காலை திருமணத்துக்காக மணப்பெண்ணை அலங்காரம் செய்து மணமேடைக்கு உறவினர் கள் அழைத்து வந்தனர். திருமணம் நடக்கவிருந்த சில நிமிஷங்களுக்கு முன் போலீஸார் திடீரென மண்டபத்துக்குள் நுழைந்தனர்.

அவர்கள், மணப்பெண் வீட்டாரை தனியாக அழைத்துச் சென்று, மணப்பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், இதுதொடர்பாக அவர் மாவட்டக் காவல் துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார் என்றும் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மணப்பெண்ணை அழைத்துச் சென்று சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால், மணப்பெண்ணோ போலீஸாரிடம், ‘எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை’ என்று உறுதிபட தெரிவித்தார். இதனால், விருப்பமில்லாமல் திருமணத்தை நடத்தக் கூடாது என்று கூறி போலீஸார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால், மணமேடையில் திருமணத்துக்காக காத்திருந்த மாப்பிள்ளையும், இரு வீட்டாரும், அவர்களது உறவினர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

மனநல மருத்துவர் ஆலோசனை

இதுகுறித்து மனநல மருத்துவர் ஏ. காட்சன் கூறும்போது, ‘மகன், மகள் ஆகியோரது மனநிலையை அறியாமல் பெற்றோர் அவசரப்பட்டு திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதால்தான் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவம் நேரிடுகிறது. திருமணத்துக்கு முன் திருமணம் தொடர்பாக பிள்ளைகளின் விருப்பம் குறித்து பெற்றோர் கலந்து ஆலோசித்து வெளிப்படையாக கருத்துகளை பரிமாற வேண்டும். திருமணம் என்பது ஓரிரு நாளில் முடிந்துவிடக் கூடிய சம்பிரதாய நிகழ்ச்சி இல்லை. வாழ்நாளின் கடைசி நாள் வரை இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும். எனவே, திருமண விசயத்தில் பெற்றோர் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது.

அதேபோல, திருமணத்தில் விருப்பமில்லையென்றால் தங்கள் முடிவை முன்கூட்டியே சரியான நேரத்தில் மணப்பெண்ணோ, ஆணோ தெரிவிக்க வேண்டும். கடைசி நேரத்தில் சொல்வதால் அடுத்த வரன்கள் கிடைப்பதிலும், வாழ்க்கையிலும் சிரமம் ஏற்படுகிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x