Last Updated : 01 Feb, 2019 11:20 AM

 

Published : 01 Feb 2019 11:20 AM
Last Updated : 01 Feb 2019 11:20 AM

மகத்துவம் நிறைந்த மாங்கல்யம்!

பெரும்பாலான இந்து திருமணங்களைப் பொறுத்தவரை தாலி இல்லாமல் நடப்பதில்லை. பெண்ணுக்கு நகை போடுகிறார்களோ இல்லையோ, தாலிக் கயிற்றில் குண்டுமணி அளவு தங்கமாவது சேர்த்து, பெண்ணின் கழுத்தில் கட்டுகின்றனர்.  `தாலி பெண்ணுக்கு வேலி` என்று  கூறும்

அளவுக்கு, பெண்ணைப் பாதுகாத்தது தாலிக் கயிறு.  தலை நிமிர்ந்து செல்லும் ஆடவர்கள், ஒரு பெண்ணின் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கண்டால், அவர் மணமானவர் என்பதை அறிந்து மரியாதையுடன் ஒதுங்கிப் போய்விடுவர்.

தங்கம் இல்லாவிட்டாலும், கயிற்றில் மஞ்சளைக் கட்டியாவது, தாலி அணிகின்றனர் பெண்கள். கணவன்-மனைவி இடையிலான உறுதியான பிணைப்பு, பந்தத்தை உறுதி செய்கிறது தாலி.

புனிதமாய், மகத்துவம் நிறைந்ததாய் கருதப்படும் தாலிக்கயிற்றை உற்பத்தி செய்யும் முறை சற்று வித்தியாசமானது. பருத்தி அல்லது பட்டு நூலில் தாலிக்கயிற்றை உற்பத்தி செய்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள  வரதராஜபுரத்தில் பல ஆண்டுகளாக தாலிக்கயிறு  தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் நெசவாளர்கள். விசைத்தறிக் கூடங்களில் கிடைக்கும் நூல் இழைகளை  இணைத்து,  தாலிக்கயிறு தயார் செய்கின்றனர்.  இவை, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.

மொத்த விற்பனையாளர்களால் நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால், குறைந்த லாபமே கிடைத்தபோதும், பாரம்பரியத்  தொழிலைக் கைவிட மனமின்றி தாலிக்கயிறு  தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்பு நூற்றுக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக தாலிக்கயிறு தயாரிப்பில் ஈடுபட்ட நிலையில், தற்போது சில குடும்பங்கள் மட்டுமே இப்பணியை மேற்கொள்கிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

தாலிக்கயிறு உற்பத்தியில் 35 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள கார்த்திகேயன் கூறும்போது, "எங்களிடம் கொள்முதல் செய்யப்படும் தாலிக்கயிறு, இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. ஆடித் திருவிழா, வரலட்சுமி நோன்பு, திருமணக் காலங்களில் அதிகம்  விற்பனையாகும். மேல்மருவத்தூர் மற்றும் அம்மன் கோயில்களுக்காக அதிக அளவில் தாலிக்கயிறுகள் வாங்கப்படுகின்றன.

தாலிக்கயிறு மங்கியவுடன், அதற்கு மாற்றாக புதிய கயிறு அணிந்துகொள்ளும் வழக்கம் திருமணமான பெண்களிடம் உள்ளது. விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் நூலை மூலப்பொருளாகக் கொண்டு தாலிக்கயிறு  தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்ட சுடுநீரில் நூலை ஊற வைத்து, பின் வெயிலில் உலர்த்தி  பேக்கிங் செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவற்றை பேக்கிங் செய்து அனுப்ப மாற்று வழியின்றித் தவிக்கிறோம். தினமும் 1,000 முதல் 4,000 தாலிக்கயிறுகள் உற்பத்தி செய்யப்படுகிறன. ஒரு மாதத்துக்கு சுமார் 2 டன் தாலிக்கயிறு உற்பத்தியாகிறது. பனி மற்றும் மழைக்காலங்களில் உற்பத்தி முடங்கி விடும். குறிப்பிட்ட சீசன்களில் விற்பனை இருக்கும். கடந்த சில மாதங்களாக சபரி மலை சீசன் என்பதால், கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் மஞ்சள் கயிறு அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கிடையில், கிராமப்புறமாக இருந்தாலும், தண்ணீர்த்  தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால், தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசு உதவ வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x