Published : 28 Feb 2019 08:39 AM
Last Updated : 28 Feb 2019 08:39 AM
மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதிமுக அரசின் சாதனை திட்டங்களை கிராமம் தோறும் வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து பிரச்சாரம் மேற்கொள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பணியை தொடங்கியுள்ளது. மேலும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகள் தெரிவிக்கும் புகார்களுக்கு பயிற்சி பெற்ற சிறப்பு குழுக்கள் மூலம் பதிலடி கொடுக்க தயாராகிவிட்டது.
தமிழகத்தில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்பபிரிவு என்ற புது யுக்தியை கையாண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரை பின்பற்றி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகிறது. கார்பரேட் அலுவலகத்தை போல், தனி அலுவலகம் அமைத்து பல்வேறு புதிய திட்டங்களோடு செயல்பட்டு வருகிறது. தொகுதி வாரியாக வாட்ஸ்அப் மூலம் மக்களை இணைப்பது, செல்வாக்கு நிறைந்த, செல்வாக்கு குறைந்த பகுதிகள் பற்றிய தகவல் சேகரிப்பது, பூத் வாரியாக வகைபடுத்தி அதிமுக தகவல்களை கணக்கெடுத்து தலைமையிடம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து செல்போன் கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுபுதிய வியூகங்களை அமைத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதிமுக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள் மற்றும்தொகுதிகள் வாரியாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து கிராமப் புறங்களில் அதிமுக வாட்ஸ்அப் குழுக்கள்அமைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணியை தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் 3 கோடியே40 லட்சம் பேர் தினமும் இணையதளம் பயன்படுத்தி வருகின்றனர். சமூக வளைதளங்கள் மற்றும் செல்போன் மூலம் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.
கிராமப்புறங்களில் அதிமுக நிர்வாகிகள் மூலம் ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்துள்ளோம். இதில், லட்சகணக்கான கிராமப்புற மக்கள் இணைந்துள்ளனர். அதிமுக நிர்வாகிகள் மட்டுமே தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் இணைந்துள்ளனர். ஸ்மார்ட் போன் இல்லாத மக்களின் செல்போன்களுக்கு வாய்ஸ் கால் மூலம் தொடர்பு கொள்வோம்.
இதுதவிர, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வளைத்தளங்களில் எதிர்கட்சிகள் பதிவிடும் புகார்கள், வதந்திகளுக்கு எங்களது சிறப்பு குழுவினர்கள் மூலம் பதிலடி கொடுக்க தயாராகவுள்ளோம். பொதுமக்களின் கேள்விகளுக்கு உண்மையான ஆதாரங்களை முன்வைத்து விளக்குவோம். புதியதாக வரும்இளம் வாக்காளர்கள் அதிமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்துவோம். மேலும், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தேர்தல் பிரச்சாரவீடியோக்களை சமூக வலைத்தளங்கள், பொதுகூட்டங்களில் திரையிட்டு வாக்குகளை சேகரிக்கரிக்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT