Published : 17 Feb 2019 09:49 AM
Last Updated : 17 Feb 2019 09:49 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் கொப்பரை தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உடைக்காத தேங்காய்கள் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காவேரிப்பட்டணம் வழியாக நெடுங்கல், அரசம்பட்டி பகுதியில் ஆற்று தண்ணீர் மூலமும், வேலம்பட்டி, பாரூர், நெடுங்கல், பண்ணந்தூர், மருதேரி, அரசம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர், பர்கூர், மஞ்சமேடு உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று மேடுகள், வயல் வரப்பு ஓரங்களிலும், விவசாய நிலங்களில் என சுமார் 36 ஆயிரம் ஏக்கரில் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.
தென்னை மரங்களை நம்பி தேங்காய் மண்டிகளும், துடைப்பம், நார் தயாரிக்கும் சிறுத்தொழில்களும், தென்னை ஓட்டி பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வடமாநிலங்கள்தேங்காய் பருப்பு, கொப்பரை ஏற்றுமதி தொழிலிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை விவசாயிகள் தேங்காய்களை வியாபாரிகளிடம் விற்பனை செய்யாமல், கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் கொப்பரை தேங்காய்களை தரம் பிரித்து வெளிச்சந்தை மூலம் ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு கொப்பரை ஏற்றுமதியாகிறது.
முதல் ரக கொப்பரை தேங்காய்கள் கிலோ ரூ.160-க்கும், 2-வது ரகம் 140-க்கும், 3-வது ரகம் ரூ.120-க்கும் கொள்முதல் செய்வதாக கூறும் தென்னை விவசாயிகள். அரசு கொள்முதல் மையத்தில் போதிய லாபம் இல்லை என்கின்றனர்.
கொள்முதல் விலை குறைவு
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறும்போது, தேங்காய் வியாபாரத்தில் தேங்காய்க்கு, ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே விலை கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதிகபட்சமாக 4 தேங்காயை உடைத்து கொப்பரை எடுத்து உலர்த்தி பதப்படுத்தினால், ஒரு கிலோ கொப்பரைத் தேங்காய் கிடைத்து விடும். இதன் மூலம் கூடுதல் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. இங்குள்ள தென்னை விவசாயிகளின் நலன் கருதி காவேரிப் பட்டணத்தில் அரசு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டு எவ்வித பயனும் இல்லை, என்றனர்.
மழையின்மையால் வறட்சி
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, காவேரிப்பட்டணத்தில் அரசு கொள்முதல் மையம் மூலம் முதல் ரக கொப்பரை தேங்காய்கள் கிலோ ரூ.100-க்கும் கொள்முதல் செய்கின்றனர். வெளிச்சந்தையை விட ரூ.60 குறைவாக கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, கொப்பரை தேங்காய்கள், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. தற்போது கடும் வறட்சியால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொப்பரை தேங்காய்கள் கிலோ ரூ.200-க்கு மேல் கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்.
மேலும், கேரளா மாநிலத்தில் தென்னை வாரியம் மூலம் அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து உடைக்காத தேங்காய்கள் கொள்முதல் செய்கின்றனர். இதற்காக மத்திய அரசு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கேரளா மாநிலத்தை விட தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரியில் அதிகளவில் தேங்காய் உற்பத்தி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, தென்னை வாரியம் மூலம் நார் உறிக்கப்பட்ட உடைக்காத தேங்காய்கள் கொள்முதல் செய்ய, கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT