Published : 04 Feb 2019 12:38 PM
Last Updated : 04 Feb 2019 12:38 PM
மக்களவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
67 வயதாகு கே.எஸ்.அழகிரி சர்ச்சைப் பேச்சுகளை உதிர்க்காதவர், சிறந்த களப்பணியாளர் என்று அறியப்பட்டவர். 1991 - 96 இடைப்பட்ட காலகட்டத்தில் கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்ஃபோன்ஸ், சொக்கர், செல்லக்குமார் ஆகியோர் தமிழக சட்டப்பேரவையின் கவனத்தை ஈர்த்த தலைவர்களாக இருந்தனர்.
ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சி என்றால் இப்போதெல்லாம் கோஷ்டி பூசல் மட்டுமே நினைவுக்கு வரும் சூழலில் இரண்டு முறை எம்எல்ஏவாகவும் ஒருமுறை எம்.பி.யாகவும் இருந்த கே.எஸ்.அழகிரி தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
கட்சி உறுப்பினர்கள் அனைவரின் நம்பிக்கையையும் வெல்வேன் என உறுதியளித்திருக்கிறார்.
அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து..
தமிழக காங்கிரஸ் தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் என்ன?
தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் மக்களை மதம், சாதி, சித்தாந்தங்கள் ரீதியாக பிரித்துவைத்திருக்கிறன. இந்த சூழலில் இளைஞர்களை மதச்சார்பின்மை, ஜனநாயகக் கோட்பாடுகளால் ஈர்க்காவிட்டால் அவர்கள் பாஜகவின் தீய கட்டமைப்புக்குள் சிக்கும் அபாயம் இருக்கிறது.
அண்டை நாடுகள் எல்லாம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தபோது இந்தியா சூப்பர்பவர் ஆகும் சூழல் இருப்பதற்குக் காரணம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட சமூக பொருளாதார அரசியல் கொள்கைகளே. அந்த கொள்கைகள் அழிந்துபோகாமல் வலுப்படுத்த வேண்டும்.
கட்சிக்குள் நிலவும் பூசல்களை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு என்று ஒரு கட்டமைப்பு இருக்கிறது. அதை வலுப்படுத்துவதே எனது முதல் பணி. கட்சியின் தலைவர் என்ற முறையில் அதை செய்வேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் அடிமட்ட தொண்டர்களை வலுப்படுத்த புராஜக்ட் சக்தி என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதனை நான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்வேன்.
தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களின் ஆதிக்கத்தில் உள்ள நிலையில், இது கடினமான காரியம் இல்லையா?
மற்ற கட்சிகளில் இவ்வளவு பலம் பொருந்திய அரசியல் தலைவர்களை உங்களால் பார்க்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் ஜனநாயகம் அவர்களுக்கு இதை சாத்தியமாக்கியிருக்கிறது. சுதந்திர காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி இத்தகைய வலுவான தலைவர்களால் ஆளுமை செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
மகாத்மா காந்தியின் எண்ணங்கள் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜாஜி ஆகியோருடன் ஒத்துப்போனது. கட்சிக்குள் ஏதாவது குறைகள் இருந்தால் அவற்றை நேர்மறையான அம்சங்களாக மாற்றுவதே எனது இலக்கு.
அவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா?
நீங்கள் உங்கள் ஆணவத்தை அதிகாரத்தை காட்டாத தலைவராக இருந்தால் எல்லோரும் ஒத்துழைப்பார்கள்.
காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸுக்கு 4 செயல் தலைவர்களை நியமித்திருக்கிறதே..
இதேபோல் கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் நியமித்திருக்கிறது. இதற்குக் காரணம் அதிகாரக் குவியலை தடுப்பது மட்டுமே. தமிழகத்திலும் அதிகாரக் குவியல் தடுக்கப்படும்.
நீங்கள் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அனுதாபி என்பதாலேயே இந்தப் பதவி கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறதே?
எனது கல்லூரி நாட்களில் இருந்தே எனது மனதுக்கு நெருக்கமான தலைவராக ப.சிதம்பரம் இருக்கிறார். ஆனால், நான் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்குமே உண்மையானவன். என்னை யாரும் சிதம்பரத்தின் ஆள் என்று அடையாளப்படுத்த முடியாது. தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோரும் எனக்கு நல்ல நண்பர்களே.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT