Last Updated : 08 Sep, 2014 10:45 AM

 

Published : 08 Sep 2014 10:45 AM
Last Updated : 08 Sep 2014 10:45 AM

கந்து வட்டி கொடுமையை தடுக்க ‘ஆபரேஷன் குபேரா’ - கேரளாவை போல தமிழகத்திலும் செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

கந்து வட்டி தொடர்பான குற்றங்களைத் தடுக்க கேரள மாநிலத்தில் உள்ளது போல் தமிழகத்திலும் ‘ஆபரேஷன் குபேரா’ நடவடிக்கையை மேற் கொள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சுந்தரம். இவர் இமானுவேல் என்பவரிடம் ரூ. 11 லட்சம் கடன் வாங்கினார். இந்த கடனுக்காக சுந்தரத்துக்கு சொந்தமான ரூ. 85 லட்சம் மதிப்புள்ள 22 கடைகள், 4 வீடுகள் கொண்ட சொத்தை அபகரித்ததாக இமானுவேல் மற்றும் அவரது இரு மருமகன்கள் உட்பட 4 பேர் மீது சுந்தரம், காரியாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்யாததால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுந்தரம் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

அதன்படி, இமானுவேல் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவர்களை கைது செய்யவில்லை. இதையடுத்து கந்துவட்டி வழக்கை, வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் சுந்தரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என். கிருபாகரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிடும்போது, ‘காரியாப்பட்டியில் வட்டிக்கு பணம் கொடுப்பதை பிரதான தொழிலாகச் செய்துவரும் இமானுவேல், தனது பெயரிலும், பினாமி பெயரிலும் 600 முதல் 700 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். இந்த நிலத்தில் பெரும்பாலான இடம், அவரிடம் வட்டிக்கு கடன் பெற்று, கூடுதல் வட்டி கொடுக்க முடியாமல் தவித்தவர்களிடம் இருந்து பறித்தவை ஆகும் என்றார்.

இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தது:

தமிழகத்தில் 2003-ல் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் வந்த பிறகுதான் கந்து வட்டியின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தது. கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க குண்டர்களுடன் சேர்ந்து அப்பாவிகள் மீது நடத்தப்படும் மூன்றாம் தர நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கேரளாவில் கந்து வட்டி வசூலைத் தடுக்க ‘ஆபரேஷன் குபேரா’என்ற பெயரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோன்று, தமிழகத்திலும் கந்து வட்டி வசூலிப்போர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு சரியான நேரம் இதுவே. தமிழகத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீதான புகாரை விசாரிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் கந்துவட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட 2003-ம் ஆண்டில் இருந்து இதுவரை வரப்பெற்ற புகார்கள் குறித்தும், அந்த புகார்களின் தற்போதைய நிலை குறித்தும், மாவட்ட வாரியான விவரங்களை, மாநில காவல்துறை இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

‘ஆபரேஷன் குபேரா’ ஒரு பார்வை

சில மாதங்களுக்கு முன், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, கந்துவட்டி வசூலிப்பவர்களை களையெடுக்க, ‘ஆபரேஷன் குபேரா’திட்டம் உருவாக்கப்பட்டது.

கேரள மாநிலம் முழுவதும் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கந்து வட்டித் தொழிலில் ஈடுபட்ட 773 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கந்து வட்டி தொடர்பாக 1448 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரூ.4.18 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தகவலை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கந்து வட்டி குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ஆபரேஷன் குபேரா’நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அங்குள்ள நிதி நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x