Published : 19 Jan 2019 10:30 AM
Last Updated : 19 Jan 2019 10:30 AM

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேகரமாகும் உயிரி மருத்துவக் கழிவுகளை அழிக்கும் மையம் தொடங்க கட்டுப்பாடு தளர்வு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பால் புதிய நிறுவனங்கள் அதிகரிக்க வாய்ப்பு

உயிரி மருத்துவக் கழிவுகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் முறையாக அழிப்பதை உறுதி செய்வதற்காக, அத்தகைய கழிவுகளை அழிக்கும் மையங்களை தொடங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தளர்த்தியுள்ளது.

தமிழகத்தில் 284 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 397 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் அறுவை கிசிச்சையின்போது வெட்டி எடுக்கப்படும் உடல் பாகங்கள், ரத்தம் துடைக்கப்பட்ட பஞ்சு உள்ளிட்ட உயிரி மருத்துவக் கழிவுகளை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உயிரி மருத்துவக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகளின் கீழ் முறையாக அழிக்கப்பட வேண்டும்.

அதன்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்ற பொது உயிரி மருத்துவக் கழிவு அழிப்பு மையங்களில் மட்டுமே கொடுத்து அழிக்கப்பட வேண்டும். இதுபோன்ற கழிவுகளை அழிக்கும் மையங்கள் தமிழகம் முழுவதும் 11 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு குறிப்பிட்ட மாவட்டப் பகுதிகள் சேவை பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

உயிரி மருத்துவக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகளின்படி, ஏற்கெனவே இயங்கி வரும் கழிவு அழிப்பு மையத்திலிருந்து 75 கிமீ சுற்றளவில், புதிய மையத்தை திறக்க முடியாது. குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகள், குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே மருத்துவக் கழிவுகளை கொடுக்க வேண்டும். சென்னையில் இயங்கும் இரு மையங்களில் ஒரு கிலோ உயிரி மருத்துவக் கழிவை அழிக்க ரூ.39 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

கட்டுப்பாடுகள் தளர்வுவிதிகளின்படி அழித்தால் அதிக செலவாகும் என்று கருதிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், முறையற்ற வகையில் வெளியில் கொட்டி அழித்து வந்தனர். இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புதிய கழிவு அழிப்பு மையங்களை தொடங்குவதற்கான கட்டுப்பாடுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தளர்த்தியுள்ளது.

இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் மருத்துவ கேந்திரமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அதனால் மருத்துவக் கழிவுகள் அடுத்த சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரிக்கும். அவற்றின் மூலம் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளை முறையாக அழிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

அதனால், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி, ஏற்கெனவே இயங்கி வரும் மருத்துவக் கழிவு அழிப்பு மையத்திலிருந்து எத்தனை கிமீ தொலைவில் வேண்டுமானாலும் புதிய மையத்தை தொடங்கலாம். ஒரு மருத்துவமனை எந்த மையத்திடம் வேண்டுமானாலும், 48 மணி நேரத்துக்குள் உயிரி மருத்துவக் கழிவுகளை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் புதிய நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்படும். அதனால் கழிவுகளை அழிக்கும் கட்டணம் குறையும். அதன் மூலம் மருத்துவமனைகள் கழிவுகளை வெளியில் கொட்டுவது குறைந்து, முறையாக அழிப்பது உறுதி செய்யப்படும். பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x