Published : 14 Jan 2019 08:59 AM
Last Updated : 14 Jan 2019 08:59 AM
தாம்பரத்தில் செயல்பட்டு வரும் 61 ஆண்டு கால பழமையான நூலகத்துக்கு ரூ. 85 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது.
தாம்பரம் நகராட்சி பகுதியில், 1957-ம் ஆண்டு, ஜூலை 1-ம்தேதி பகுதி நேர கிளை நூலகம் தொடங்கப்பட்டது. பின்னர், 2008-ம் ஆண்டு முழு நேர கிளை நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பொது அறிவு புத்தகங்கள், நாவல்கள், வரலாற்று நூல்கள், அகராதி தொகுப்புகள் என 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
நூலகத்துக்கு 6,546 உறுப்பினர்கள், 48 புரவலர்கள் உள்ளனர். நாள்தோறும், 450-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகின்றனர். தினமும் 170 நூல்கள் எடுத்துச் செல்கின்றனர். 400-க்கும் அதிகமான நூல்கள் தினசரி பயன்படுத்தப்படுகிறது. மேலும், 15 தின பத்திரிக்கைகள், 15 வார பத்திரிக்கைகள், 150 மாத பத்திரிக்கைகள் வருகின்றன.
தொடர்ந்து, 61 ஆண்டுகளாக பழமை வாய்ந்த வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இடவசதி இல்லை. எனவே நூலகத்துக்கென புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் வாசகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.50 லட்ச நிதி ஒதுக்கீடு செய்தார். அதேபோல் நூலகத்துறை சார்பில் ரூ. 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுகுறித்து நூலகர் வெங்கடேஷன் கூறும்போது, ‘‘புதிய கட்டிடத்தில் தரை தளத்துடன் கூடிய இரண்டு தளங்கள், கழிப்பறை வசதியுடன் கட்டப்படவுள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம், குழந்தைகள் பிரிவு, கணினி பிரிவு, இ சேவை பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் ஏற்படுத்துப்பட உள்ளது’’ என்றார்.
5,000 நூல்கள் வாசகர்கள் கூறியதாவது: பழமையான நூலகம் என்பதால் கட்டிடங்கள் முழுவதும் சிதிலமடைந்து உள்ளது. மழைக்காலத்தில், ஆங்காங்கே ஒழுகும் நிலை ஏற்படும். குறிப்பாக, 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, நூலகத்தில், இரண்டு நாட்கள் வரை மழைநீர் தேங்கி, 5,000-க்கும் மேற்பட்ட நூல்கள் அழிந்தன. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகளைத் தொடங்காமல் நகராட்சி காலதாமதம் செய்தது. தற்போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுப்பணித்துறையிடனரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர்களும் பணியை தொடங்கவில்லை. விரைவில் புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT