Last Updated : 24 Jan, 2019 05:13 PM

 

Published : 24 Jan 2019 05:13 PM
Last Updated : 24 Jan 2019 05:13 PM

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு: பயனாளர்களின் எண்ணிக்கை கோவையில் உயர்வு

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு பெறும் வசதியை கோவையில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

வரிசையில் நின்று பயணச்சீட்டு பெறுவதால் ரயில் நிலையங்களில் ஏற்படும் நேர விரயம், காத்திருப்பைத் தவிர்க்கவும், காகிதத்தின் பயன்பாட்டை குறைக்கவும், முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை செல்போன் மூலம் பெறும் UTS செயலியை ரயில்வே அறிமுகம் செய்தது.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் பயன்பாட்டுக்கு வந்த இந்தச் செயலியை 2018 மார்ச் 31-ம் தேதி வரை 575 பேர் பதிவிறக்கம் செய்து, 760 பேர் ரயிலில் பயணம் செய்தனர். இதன்மூலம் ரயில்வேக்கு ரூ.49,910 வருவாய் கிடைத்தது. இந்நிலையில், 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை பயனாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 19 ஆயிரம்பேர் யுடிஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன்மூலம் 27,985 பயணம் செய்ததில், ரயில்வேக்கு ரூ.13.48 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தினந்தோறும் 124 ரயில்கள் கோவை ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. இதில், 15 பயணிகள் ரயில்களும் அடங்கும். கோவையைப் பொருத்தவரை, கோவை-பொள்ளாச்சி பயணிகள் சிறப்பு ரயில், கோவை-மேட்டுப் பாளையம் பயணிகள் ரயிலில் பயணிப்போர், பாலக்காடு, திருப்பூர், ஈரோடு செல்வோர், யுடிஎஸ் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

யுடிஎஸ் செயலியை ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் செல்போன்களில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் செல்போன் எண், அடையாள அட்டை விவரங்களை சமர்ப்பித்து பிரத்தியேக கணக்கை உருவாக்கிகொண்டு பயணச்சீட்டு பெறலாம். இந்தச் செயலியை ரயில்நிலையத்துக்கு 5 கிலோ மீட்டருக்கு உட்பட்ட எந்தவொரு இடத்தில் இருந்தும் பயன்படுத்தி பயணச்சீட்டு பெற செய்ய முடியும்.

அதேபோல, ரயில் நிலையத்துக்கு 25 மீட்டருக்கு வெளியே இருந்துதான் பயணச்சீட்டு பெற முடியும். ரயில் நிலையத்துக்குள் நின்றுகொண்டு பயணச்சீட்டு பெற முடியாது. ஒரு பயணி ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 4 பயணச்சீட்டுகள் வரை பெறலாம்.

யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவில்லா பயணச்சீட்டு, பிளாட்பார டிக்கெட், மாதாந்திர பயணச்சீட்டுகளை உடனடியாக பெற முடியும். பயணச்சீட்டு பரிசோதகர் கேட்கும்போது செல்போன் திரையில் தோன்றும் பயணச்சீட்டினை காட்டினால் போதும். இதுதவிர, பயணச்சீட்டு வழங்கும் கவுன்ட்டர்களில் உள்ள கூட்டத்தைக் குறைக்க 3 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் கோவையில் நிறுவப் பட்டுள்ளன.

அவற்றுக்கும் பயணி களிடையே அதிக வரவேற்பு உள்ளது. யுடிஎஸ் செயலி தொடர்பான கூடுதல் விவரங் களுக்கு 044-25351621 என்ற தொலைபேசி எண்ணில் வாடிக்கையாளர் சேவை மையத்தைபயணிகள் தொடர்புகொள்ள லாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.100-க்கு ரூ.5 போனஸ்

யுடிஎஸ் செயலி மூலம் பெறப்படும் டிக்கெட்டுக்கான கட்டணத்தை ‘ஆர்-வேலட்’ (R-Wallet) மூலம் மட்டுமே செலுத்த முடியும். டெபிட், கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் உள்ளிட்டவற்றின் மூலம் ரயில்வேயின் ‘ஆர்-வேலட்’டில் பணத்தை செலுத்தி, அதிலிருந்து டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். பயணச்சீட்டு வழங்கும் இடங்களிலும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

‘ஆர்-வேலட்’-ல் ரீசார்ஜ் செய்யும்போது ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், ரூ.5 போனஸாக வழங்கப்படுகிறது. உதாரணமாக, ரூ.1,000-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 போனஸாக வழங்கப்பட்டு, உங்கள் கணக்கில் ரூ.1,050 வந்துவிடும். மேலும், ‘ஆர்-வேலட்’-ல் உள்ள பணம் நம் அவசர தேவைக்கு தேவைப்பட்டால், அந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x