Last Updated : 17 Jan, 2019 09:31 AM

 

Published : 17 Jan 2019 09:31 AM
Last Updated : 17 Jan 2019 09:31 AM

பனங்கற்கண்டு, பனஞ்சீனி, வெல்லம் உட்பட பனைப் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வால் விற்பனை சூடுபிடித்தது

பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சீனி ஆகிய பனை பொருட்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.

அந்நிய நிறுவனங்களின் வருகையாலும் விலை அதிகம் என்பதாலும் பனைப் பொருட்களுக்கு உரிய வரவேற்பு இல்லாமல் போனது. இதையடுத்து பனை ஏறு வோரின் எண்ணிக்கையும் குறைந்தது.

இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட் களுக்கு தற்போது அரசு தடை விதித்திருப்பதால் இனிப்பு உள்ளிட்ட தின்பண்டங்கள், ஆட்டிறைச்சி, மீன், கோழி இறைச்சி போன்றவற்றை எடுத்துச் செல்லப் பயன்படும் பனைஓலைப் பெட்டிக் கான தேவை அதிகரித்து வருகிறது. பனங்கற்கண்டில் புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் அவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். நீரிழிவு நோயாளிகள் உட்பட அனைத்து தரப்பினர் மத்தியிலும் பனை பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள் ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தற்போது 3 கோடியே 50 லட்சம் பனைமரங்கள் உள்ளன. சென்னை மாதவரத்தில் ஒரு ஏக்கரில் அமைந்துள்ள மத்திய பனைப்பொருட்கள் பயிற்சி நிறுவனம், பனைப் பொருட்கள் உற்பத்திக்கு பயிற்சி அளித்து உதவித் தொகையும் வழங்கி வருகிறது.

இம் மைய வளாகத்தில் உள்ள 8 பனைமரங்களில் இருந்து பதநீர் இறக்கி அதில் இருந்து மாதிரிக்காக பனங்கற்கண்டு, பனஞ்சீனி தயாரிக்கின்றனர். இப்போது அவற்றின் தேவை அதிகரித்திருப்பதால் மேற்கண்ட மையத்தின் அருகில் ஆவின் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தில் உள்ள 150 பனைமரங்களை குத்தகைக்கு எடுக்கவுள்ளனர். அதன்மூலம் அதிகமான பேருக்கு பயிற்சி அளிக்தத் திட்டமிட்டுள்ளனர்.

மாதவரத்தில் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. அவற்றில் இருந்து பதநீர் இறக்கி நவீன உபகரணங்களைக் கொண்டு தரமான பனங்கற்கண்டு தயாரித்து விற்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அதுபோல நடவடிக்கை எடுத்தால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

அலங்காரப் பொருட்கள்

தற்போது பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பனைஓலைப் பெட்டி (ஓலைக் கொட்டான்), விசிறி உள்பட 120 வகையான பனைப் பொருட்கள் தயாரித்து விற்கலாம். குருத்தோலையில் இருந்து தோரணம், அலங்காரப் பொருட்கள் உட்பட 30 வகையான நவநாகரீகப் பொருட்கள் தயாரிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பனைப்பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x