Published : 29 Jan 2019 12:46 PM
Last Updated : 29 Jan 2019 12:46 PM

மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்படத் தொடங்கியது: புதிய மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர் நியமனம் எப்போது?

மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்யாமலேயே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.

மதுரையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி னார். அப்போது மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலியில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி முதல் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படத் தொடங்கியது.

இப்பணிகளை மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ பார்வையிட்டார். தற்போது சிறுநீரக சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை துறை, குடல் இரைப்பை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை துறை, நரம்பியல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை துறை ஆகிய 6 துறைகள் மட்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.

ரூ.150 கோடியில் 5 தளங்களாகக் கட்டப்பட்டுள்ள மதுரை சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையில் தரைத்தளமும், முதல் தளமும் செயல்பாட்டுக்கு வந்தன.

முதல் தளத்தில் வெளிநோயாளிகள் பதிவு அறை, குடல் இரைப்பை வெளி நோயாளிகள் பிரிவு, நரம்பியல் மருத்துவம் வெளி நோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவைச் சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவைச் சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவு-1, நரம்பியல் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவு-2, நுண் குழாய் ரத்த நாள ஆய்வகம், மூளை மின் முனை வரைவு மற்றும் மின் அலை வரைவு அறை ஆகியவை செயல்படுகின்றன.

தரை தளத்தில் ரத்தவங்கி அறை, உயிரி வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் பரிசோதனைக் கூடம், மருந்தகம், குடல் இரைப்பை அறுவை சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவு, சிறுநீரக மருத்துவச் சிகிச்சை வெளி நோயாளிகள் பிரிவு, அரங்கம் ஆகியவை செயல்படுகின்றன.

தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தனியாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர், செவி லியர், மருத்துவப் பணியாளர் நிய மிக்கப்படவில்லை.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவப்பணி யாளர்களே தற்காலிக பணியாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

மருத்துவ உபகரணங்களும் முழுமை யாக பொருத் தப்படவில்லை. பிரதமர் தொடங்கினார் என்ற காரணத்துக்காக பெயரளவுக்கு புதிய மருத்துவ உயர் சிகிச்சைப்பிரிவு என்ற பெயரில், அதற்கான கட்டிடங்களை மட்டும் கட்டிவிட்டு, பணியாளர்களை புதிதாக நியமிக்காமல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்படுவது நோயாளிகளுக்கு உகந்தது இல்லை.

அரசு ராஜாஜி மருத்து வமனையும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் மருத்துவர் கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையுடன் தற்போது இயங்குகிறது. இதனால் பணியாளர்களின் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரிய எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்டி, டிஎம் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதுபோல், சூப்பர் ஸ்பெஷாலிட்டி அறுவை சிகிச்சைப் பிரிவுகளுக்கு எம்பிபிஎஸ் படித்துவிட்டு எம்எஸ், எம்சிஎச் படித்திருக்க வேண்டும்.

தற்போது மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலும் சேர்த்து 2 பேராசிரியர்கள், 2 இணைப் பேராசிரியர்கள், 6 உதவிப் பேராசிரியர்கள் தேவைப்படுவர். அதுபோல், 100 செவிலியர்களும் தேவைப்படுகின்றனர். 60 மருத்துவப் பணியாளர்கள் தேவைப் படுகின்றனர் ’’ என்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஏற்கெனவே இங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு முடித்த மருத்துவர்கள் ஓரளவுக்கு இருக்கிறார்கள். அவர்களை வைத்துதான் தற்போது ஸ்பெஷாலிட்டி மருத்துவப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மருத்துவர்கள் கோரப்பட்டுள்ளனர் என் றார்.

மருத்துவர்களுக்கு தட்டுப்பாடா?

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,555 எம்பிபிஎஸ் இடங்களும், எம்டி, எம்.எஸ் ஸ்பெஷாலிட்டி படிப்புகள், டி.எம், எம்.சிஎச் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு 2,304 இடங்களும் உள்ளன.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நுழைவுத்தேர்வு அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ் படிப்புகளையும், அதன்பின் எம்.சிஎச், டிஎம் படிப்புகளையும் படிக்கின்றனர்.

அரசு செலவில் ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி உயர்கல்வி படிக்கும் இந்த மருத்துவர்கள், படிப்பை முடித்ததும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். ஆனால், தனியார் கல்லூரியில் படித்த மருத்துவர்கள், படிப்பை முடித்ததும் தனியார் மருத்துவமனைகளுக்கு பணிக்கு செல்கின்றனர். அதனால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x