Published : 02 Jan 2019 11:05 AM
Last Updated : 02 Jan 2019 11:05 AM

நம்பிக்கையை விதைக்கும் ‘பருப்புக்காரர்கள்’- ‘பண்டமாற்று முறை’ காலத்தில் தொடங்கி ‘ஆன்லைன்’ யுகத்திலும் தொடர்கிறது

புளிக்காரர், பருப்புக்காரர், கடலைக்காரர் என பல்வேறு பெயர்களில் மக்களால் அழைக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், திருச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாள்தோறும் பலசரக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று வீடுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

வாரத்துக்கு ஒருமுறை வரும் வியாபாரி வராவிட்டால், மறுவாரம் வரும்போது, ஏன் போன வாரம் வரவில்லை என்று உறவினர்களிடம் கேட்பது போல வாடிக்கையாளர்கள் கேட்பது இத்தகைய வியாபாரிகளிடம் மட்டும்தான் என்று சொல்லலாம்.

மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையை எடுத்துவிட்டு பெரிய மூங்கில் கூடை, அதன் இருபுறமும் பெரிய பைகள், முன்னால் முடிந்த வரை அட்டைப் பெட்டியில் பொருட்கள் என வண்டி முழுவதும் மளிகை பொருட்கள் மற்றும் தின்பண்டங்களால் நிறைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்வார்கள்.

நடமாடும் மளிகை கடையாக மோட்டார் சைக்கிளில் வலம்வரும் இந்த பருப்புக்காரர்களின் பாரம்பரியம், 50 ஆண்டுகளுக்கு முன் தலைச் சுமையாக புளி, மிளகாய் வற்றல் போன்ற பொருட்களை கிராமங்களில் வீடு வீடாக கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக அவர்கள் விளைவித்த நெல், பயறு வகைகள் உள்ளிட்ட சிறு தானியங்களை வாங்கிச் செல்வார்கள். பணம் இல்லாத பண்டமாற்று முறைக்கு உதாரணமாக இவர்களைச் சொல்லலாம். அந்த காலகட்டத்தில் இவர்களை மக்கள் புளிக்காரர் என்று அழைத்தனர். இத்தொழில் அடுத்த தலைமுறையினரின் கைக்கு வந்தபோது புளி, மிளகாய் வற்றலுடன், சிறு தானியங்கள், அரிசி, பலசரக்கு ஆகிய பொருட்களையும் சேர்த்துக் கொண்டனர். நடந்து செல்வதில் இருந்து சைக்கிளுக்கும் பின்னர் மோட்டார் சைக்கிளுக்கும் மாறினர்.

இன்றைக்கு குக்கிராமங்களில் கூட மளிகை, பெட்டிக் கடைகள் வந்துவிட்ட நிலையிலும் இவர்களுக்கான வரவேற்பு மக்களிடம் குறையவில்லை.

இதுகுறித்து கருமண்டபத்தை சேர்ந்த வியாபாரி ரவி கூறியபோது, "தாத்தா, அப்பா செய்த வியாபாரத்தை தொடர்ந்து நான் செய்கிறேன். திருச்சியில் மட்டும் 500-க்கும் அதிகமான வியாபாரிகள் இருக்கிறோம். ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிராமம் அல்லது ஏரியா என பிரித்துக்கொண்டு அங்கு செல்வோம். ஒருவர் பார்க்கும் லைனில் மற்றவர் வியாபாரம் செய்ய மாட்டார்.

பெரும்பாலும் கடனாக பொருட்களை வழங்குவோம். வார சம்பளத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் சனிக்கிழமை தோறும் பணம் கொடுத்து விடுவார்கள். மாத கணக்கும் உண்டு.

இதுதவிர, வீட்டு விசேஷங் களுக்கு மொத்தமாக பலசரக்கு வாங்கிக் கொண்டு மொய்யைக் கொண்டு கடனை கட்டுவதும் உண்டு. ஒரு வியாபாரி ஒரு லைனில் குறைந்தது ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கடனாக கொடுத்திருப்பார்.

பண்டமாற்று முறையில் தொடங்கிய இத்தொழிலில் பணப்புழக்கம் வந்து விட்டாலும் நம்பிக்கை இருப்பதால் இன்றும் தொடர்ந்து எங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது" என்றார்.

இதுகுறித்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த லதா கூறியபோது, "பருப்புக்காரர்களிடம் கடன் வியாபாரமே பிரதானம், அதையும் தாண்டி மனிதநேயம் இருக்கும். பணம் இல்லாத நேரத்திலும் பொருட்களை கொடுத்து உதவுவார்கள். ஆன்லைன், ஷாப்பிங் மால் என பெருகிவிட்ட நகர்ப்புற வியாபாரத்தில் கடன் என்பது வங்கி அட்டை சார்ந்து இருக்கும். பருப்புக்காரர்களிடம் நம்பிக்கையுடன் எந்த பொருளையும் வாங்கலாம். அவர்களிடம் இல்லையென்றால் அடுத்த வாரம் வாங்கிவந்து கொடுத்துவிடுவார்கள்.

10 வருடமாக ஒருவரிடமே எங்கள் பகுதியில் பொருட்கள் வாங்குகிறோம்" என்றார்.பருப்புக்காரர்களிடம் கடன் வியாபாரமே பிரதானம், அதையும் தாண்டி மனிதநேயம் இருக்கும். பணம் இல்லாத நேரத்திலும் பொருட்களை கொடுத்து உதவுவார்கள். பருப்புக்காரர்களிடம் நம்பிக்கையுடன் எந்த பொருளையும் வாங்கலாம். அவர்களிடம் இல்லையென்றால் அடுத்த வாரம் வாங்கிவந்து கொடுத்துவிடுவார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x