Published : 23 Sep 2014 01:09 PM
Last Updated : 23 Sep 2014 01:09 PM
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு குறித்து மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பில் அடுத்த மாதம் 27-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் 12,618 பேர் நியமிக்கப்பட்டனர். கிராம அளவில் நடைபெறும் அரசின் நலத் திட்டங்களை கண்காணிப்பது இவர்களது பணியாக இருந்தது.
2001-ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றதும், இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர். 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்ததும் அவர்கள் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர்.
சுமுக முடிவு
அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டு சில மாத சம்பளத்தை பெற்றுக் கொண்டு பலர் ஒதுங்கிவிட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் அரசின் திட்டத்தை ஏற்காமல், மீண்டும் பணி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்தியநாராயணா அடங்கிய அமர்வு கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாற்றுப் பணி வழங்க வேண்டும். தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், அக்டோபர் 31-ம் தேதிக்குள் அவர்களுக்கு பணி வழங்க முடியாவிட்டால், அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தை மாதந்தோறும் வழங்க வேண்டும். அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கும் வரை இந்த ஊதியம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
மேல் முறையீடு
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அனில் தவே, யு.யு.லலித் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி, ‘அவர்கள் தற்காலிகப் பணியாளர்கள். அவர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாது’ என்று வாதிட்டார்.
26 பேர் தற்கொலை
மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், ‘சட்ட அனுமதியுடன்தான் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால், 26 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மொத்தம் 152 பேர் உயிரிழந்துள்ளனர். 650 பேருக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை மீண்டும் பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.
இதுகுறித்து, மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் அக்டோபர் 27-ம் தேதிக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT