Published : 07 Jan 2019 10:41 AM
Last Updated : 07 Jan 2019 10:41 AM

கொடைக்கானல் பகுதியில் கடும் குளிர்; தண்ணீரில் இருந்து தரைக்கு வந்த நீர் நாய்கள்: ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவும் கடும் குளிர் காரணமாக, மறைந்து வாழும் தன்மை கொண்ட அரிய வகை விலங்கான நீர் நாய்கள் தண்ணீரை விட்டு வெளியேறி தரைப்பகுதிக்கு வந்தன. இவற்றை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் யானை, காட்டுமாடு, மான், சிறுத்தை உட்பட பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் வசிக்கின்றன. இவற்றில் அரிய வகை உயிரினமான நீர் நாய்களும் அடங்கும்.

கொடைக்கானலில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள கூக்கால் ஏரி மிகவும் குளிர்ந்த பகுதியாக உள்ளது. நீர் நாய்கள் வசிப்பதற்கு ஏற்ற தட்ப வெப்பநிலை உள்ளதால் அவை கூக்கால் ஏரியில் வசிக்கின்றன. தட்ப வெப்பநிலை மாற்றம் காரணமாக நீர்நாய்கள் இனம் அழிவின் விளிம்பில் இருந்து வருகின்றன.

தனக்கென ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு அந்தப் பகுதிக்குள்ளேயே இவை வாழ்கின்றன. சிறு சிறு குட்டைகள் போல் நீர் நிரம்பிய பகுதிகள், நீர் தேங்கி நிற்கும் பாறை இடுக்குகளை தங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன இந்த நீர் நாய்கள்.

வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் நீர் நாயும் இடம்பெற்றுள்ளது. விளையாட்டுக் குணமும், பயந்த சுபாவம் கொண்டதாகவும் இருக்கும் நீர் நாய்கள், மற்ற விலங்குகளிடமிருந்து விலகியே வாழ்கின்றன.

10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்த நீர் நாய்கள், பெரும்பாலும் மனிதர்களின் கண்களுக்கு தட்டுப்படாமல் வாழும். தற்போது நிலவும் கடும் குளிர் காரணமாக தண்ணீரில் இருந்து வெளியேறிய நீர் நாய்கள் ஒரு சில மணி நேரங்கள் நிலப்பரப்பில் இருந்துவிட்டு மீண்டும் நீர் நிலைகளுக்கே சென்றுவிடுகின்றன.

இதுகுறித்து கொடைக்கானல் வன மாவட்ட அலுவலர் தேஜஸ்வி கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இரண்டு வகையான நீர் நாய்கள் காணப்படுகின்றன. இவை அதிகம் வெளியே வராது. குளிர்ந்த பகுதியிலேயே வசிக்கும். தற்போது நிலப்பரப்பிலும் அதிக குளிர் இருப்பதன் காரணமாக வெளியில் வந்துள்ளன. வனப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராக் களில்கூட எப்போதாவதுதான் பதிவாகும்.

கூக்கால் ஏரி, கும்பக்கரை அருவியின் மேல்பகுதி உள்ளிட்ட நீர் நிரம்பிய குளிர்ந்த பகுதியில் வசித்து வருகின்றன. மிகவும் பயந்த சுபாவம் கொண்டது. பதுங்கியே வாழும் தன்மை கொண்டது. நீரில் உள்ள மீன், தவளை உள்ளிட்டவற்றை உணவாக உட்கொள்ளும். எப்போதாவது நம்மால் காண முடிகிறது என்பதால் நமக்கு ஆச்சரியமாகத் தோன்றுகிறது.

பழநி மலைத் தொடர்களில் ஆங்காங்கே நீர் நிறைந்த மறைவான பகுதிகளில் இந்த நீர் நாய்கள் வசிக்கின்றன. நீர்நிலைகளில் நிலவும் குளிரின் அளவுக்கு நிலப்பரப்பிலும் குளிர் காணப்படுவதால் நீர் நாய்கள் தண்ணீரிலிருந்து வெளியேறி தரைப்பகுதிக்கு வந்து செல்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x