Published : 31 Jan 2019 09:10 AM
Last Updated : 31 Jan 2019 09:10 AM
பிளாஸ்டிக் உறைகளுக்கு மாற்றாகஉணவகங்களில் அலுமினிய நிற உறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அது அனுமதிக்கப்பட்டதா என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தாததால் உள்ளாட்சி அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் உங்கள் குரல்’ சேவையை தொடர்புகொண்டு போரூரைச் சேர்ந்த வாசகர் டி.மகேந்திரன் கூறியதாவது:
பல ஆண்டுகளாக டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் உறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த பிறகு, பிளாஸ்டிக் தாள்களுக்கு மாற்றாக அலுமினிய தகடுகளை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் உறைகளுக்கு மாற்று என்ற பெயரில், தற்போது டீக்கடை மற்றும் உணவகங்களில் டீ, சாம்பார் போன்ற சூடான பொருட்கள் அலுமினிய நிற உறைகளில் வழங்கப்படுகின்றன. இது எளிதில் மக்கக்கூடியதா, அரசால் அனுமதிக்கப்பட்டதா, உடல் நலத்துக்கு பாதிப்பில்லாததா என்ற சந்தேகம் எழுகிறது. அதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “அலுமினிய நிற உறைகள் உண்மையில் அலுமினியத்தால் செய்யப்பட்டதா அல்லது அதில் பிளாஸ்டிக் கலந்துள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. அதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தாததால், அதை பறிமுதல் செய்வதா, வேண்டாமா என்பதில் எங்களுக்கும் குழப்பம் உள்ளது” என்றனர்.
நெகிழும் தன்மை இல்லை
அலுமினிய நிற உறைகள் தொடர்பாக வேதியியல் பேராசிரியரும், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதல்வருமான ஆர்.வாசுதேவன் கூறும்போது, “அலுமினிய தகடுகள் என்பது நம் கையை கிழிக்கும் வகையில் இருக்கும். அதற்கு நெகிழும் தன்மை இருக்காது. இது காற்றில் உள்ள ஈரப்பதத்தின் மூலம் மக்கும் தன்மை உடையது. அதே நேரத்தில் அலுமினிய நிற உறைகளை அலுமினிய தகடு என கூற முடியாது. பிளாஸ்டிக் பூசப்பட்ட தகடுகளாக இருக்கும். இது பிளாஸ்டிக்கை போலவே எளிதில் மக்காது.
பாதிப்பை ஏற்படுத்தும்
ஆனால் மறுசுழற்சி முறையில் சாலை அமைக்கலாம். அதற்கு முறையான மேலாண்மை அவசியம். தூக்கி வீசப்பட்டால், பிளாஸ்டிக்கை போலவே பாதிப்பை ஏற்படுத்தும். உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது தொடர்பாக அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை” என்றார்.
மத்திய பிளாஸ்டிக் பொறியியல்நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “ இதுதொடர்பாக எங்களிடம் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதனால் அலுமினிய நிற உறைகளில் உள்ள மூலப் பொருட்கள், அது மக்கும் காலம் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம்” என்றனர்.
அலுமினிய தகடுகள் மற்றும் அலுமினிய நிற உறைகளை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்த அனுமதித்திருப்பது குறித்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் உறுப்பினர் செயலர் சேகர் ஆகியோரிடம் தகவல் பெற பல முறை முயன்றும் அவர்கள் இதுபற்றிய தகவல்களை தர மறுத்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT