Published : 11 Jan 2019 04:40 PM
Last Updated : 11 Jan 2019 04:40 PM
மத்திய அரசு கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பேசும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யிடம் கனிமொழி ஆட்சேபம் தெரிவித்த காணொளி பரபரப்பானது. அதுகுறித்த பேட்டியில் மார்க்சிஸ்ட் நிலைப்பாடு குறித்து டி.கே.ரங்கராஜன் திமுக, அதிமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தனது ஆட்சியின் கடைசி வருடங்களில் சில சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றியது. அதில் குறிப்பிடத்தக்க பொருளாதாரத்தில் பின் தங்கிய மாற்று சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம். இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் வலுவாக எதிர்த்தாலும் சட்டம் எளிதாக அனைவரது ஆதரவுடன் நிறைவேறியது.
சட்டம் கொண்டு வரப்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தனது கருத்தை வைத்தபோது கனிமொழி அவரிடம் ஆட்சேபம் தெரிவித்த காட்சி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் அவரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்:
நேற்று முதல் வாட்ஸ் அப்பில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் நீங்கள் பேசும்போது கனிமொழி குறிக்கிடுகிறார்? என்ன நடந்தது? பொருளாதார இட ஒதுக்கீடு குறித்து மார்க்சிஸ்ட் நிலை என்ன?
இட ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இந்தியாவைப் பார்க்க முடியாது. மோடியின் அரசு கடைசி 100 நாளைக்கு முன்பு இதர மக்களுக்கு இட ஒதுக்கீடு தருகிறேன் என்கிறார். அவர் தரப்போவதில்லை. இதை நீங்கள் எதிர்த்தீர்கள் என்றால் நான் தருகிறேன் சொன்னேன். அதை இவர்கள் எதிர்க்கிறார்கள் என்று மோடி கூட்டத்தில் பேசுவார்.
அதை லட்சம் பேர் கேட்பார்கள். நாங்கள் நியாயமாகப் பேசினோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது என்றால் இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் இந்த இட ஒதுக்கீட்டை தனியார் துறையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களிலும் இதை அமல்படுத்துங்கள். அரசுத் துறையில் வேலை குறைந்து கொண்டிருக்கிறது.
பொதுத் துறைகளை எல்லாம் நீங்கள் விற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே தனியார் துறையில் தாங்கள் இப்போது கொடுக்கிற 10 சதவீதமும்சரி ஏற்கெனவே உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் சரி அமல்படுத்த வேண்டும் என்று நான் தனியாக தீர்மானம் ஒன்று கொண்டு வந்தேன்.
அதை மொத்தமே 11 பேர்கள் மட்டுமே ஆதரித்தார்கள். தீர்மானம் தோற்றுப்போனது. இது போன்ற இதர பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று 2014-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும், பாஜக தேர்தல் அறிக்கையிலும் இருக்கிறது.
இது 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதா?
ஆமாம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் அது இருக்கிறது. அதனால் தான் காங்கிரஸ் எதையும் முழுமையாக எதிர்க்கவில்லை. யாருமே எதிர்க்கத் தயாராக இல்லை. மக்களவையில் இதை எதிர்ப்பவர்கள் மூன்றே மூன்று பேர். ஆம் ஆத்மி எம்.பி.க்கள் மட்டுமே.
மாநிலங்களவையில் யார் எதிர்த்தது?
மாநிலங்களவையில் எதிர்த்தது திமுகவில் இரண்டு பேர். மொத்தம் நான்கு பேரில் இரண்டு பேர் வந்திருந்தனர். இரண்டு பேரும் எதிர்த்தனர். ஆம் ஆத்மி கட்சியில் இரண்டு பேர் எதிர்த்தார்கள். லாலு பிரசாத்தின் ஆர்ஜேடியில் இரண்டு பேர் எதிர்த்தார்கள். ஒரு முஸ்லிம் லீக் எம்.பி. என ஏழு பேர் தான் மொத்தமாக எதிர்த்தனர்.
வெளியே இவ்வளவு எதிர்ப்பு. உள்ளே எப்படி இவ்வளவு ஆதரவு கிடைத்தது?
மற்றவர்களெல்லாம் ஆதரித்தார்கள். ஆனால் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து விட்டுத்தான் ஆதரித்தார்கள். அவர்கள் மோடியை ஆதரிக்கவில்லை. இந்த தீர்மானத்தை ஆதரித்தார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஆதரித்ததா?
மாநிலங்களவையில் விவாதத்தில் நடந்த பேச்சுகள் முழுதையும் படித்தீர்கள் என்றால் தீர்மானத்தை ஆதரித்த அனைவரும் மோடியை முழுக்க முழுக்க விமர்சனம் செய்ததுதான் அதிகம் இருக்கும். ஆதரிக்கவில்லை என்று நீங்கள் சொல்லிவிட்டால் நீங்கள் தனிமைப்படுவீர்கள். அதிலும் வட நாட்டில் குறிப்பாக முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவீர்கள்.
இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டை வைத்து நீங்கள் இந்தியாவைப் பார்க்கக்கூடாது. மத்தியப் பிரதேசத்தில் ராஜஸ்தானில் எல்லாம் ஜாட் சமுதாயத்தினர் போராட்டம் நடத்துகிறார்கள். ஜாட் சமூகத்துக்கு இணையாக நீங்கள் தமிழ்நாட்டில் சொல்லவேண்டுமென்றால் தேவர் சமூகம், கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சொல்லலாம். ஜாட் சமூகம் அவர்கள் எல்லாம் அங்கு முற்படுத்தப்பட்டவர்கள்.
நாயுடு சமூகம் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகம். 200 மைல் தாண்டி நெல்லூருக்குச் சென்றால் அங்கு நாயுடு சமூகம் முற்படுத்தப்பட்ட சமூகம். இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் மாநிலத்துக்கு மாநிலம் இருக்கிறது. தமிழ்நாடு போன்று 69 சதவீத இட ஒதுக்கீடு எந்த மாநிலத்திலும் கிடையாது.
உத்தரப் பிரதேசத்தில் 15 சதவீதம் பிராமணர்கள் உள்ளனர். 20 சதவீம் ராஜபுத்திரர்கள் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை இட ஒதுக்கீடு கிடையாது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாகூர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. அவர்கள் முற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் தங்களுக்கு வேலை இல்லை என்று வேலை கொடு என்று போராட்டம் நடத்துகிறார்கள்.
இவர்கள் வேலை ஒன்றும் கொடுக்கப் போவதில்லை. அனைத்து வேலைவாய்ப்புகளும் சுருங்கிக் கொண்டு வருகிறது. ஐடி துறைக்கு தற்போது ஆட்களை எடுப்பதில்லை. இன்னும் பார்க்கப் போனால் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் (AI) வந்தால் இன்னும் மோசமாக போகப்போகிறது. இந்த மசோதாவின் மிகப்பெரிய மோசடி என்னவென்றால் இவை எதையுமே செய்யப்போவதில்லை.
எட்டு லட்ச ரூபாய் என்று வரம்பு வைத்துள்ளதே தப்பு. நீங்கள் வருமான வரியில் உச்சவரம்பு வைத்துள்ளதே இரண்டரை லட்சம் ரூபாய்தான். வருமான வரி உச்சவரம்பு உள்ளவர்கள் தகுதியானவர்கள் என்று சொன்னாலாவது ஏதாவது அர்த்தம் இருக்கிறது. 8 லட்சம் ஆண்டு வருமானம் என்றால் யார் அவ்வளவு சம்பளம் வாங்குவது. மாதம் 60,000 ரூபாய் சம்பளம் வாங்கும் நபர் பொருளாதாரத்தில் நலிவடைந்தவரா?
ஆகவே இது ஒரு மிகப்பெரிய மோசடி. மற்றொன்று ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது எந்தப் பகுதி என்று குறிப்பிட வேண்டும் அல்லவா? கிட்டத்தட்ட 97 சதவீதம் அதற்குள் வந்து விடுவார்கள். ஆகவே நிலம் உள்ள இடம் மும்பையில் உள்ள இடமா? அல்லது ராமநாதபுரத்தில் உள்ள இடமா? இரண்டும் ஐந்து ஏக்கர் என்றாலும் மதிப்பு ஒன்றாகிவிடாது அல்லவா? ஆகவே அதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் அல்லவா? ஆகவே இது ஒரு போலி ஏற்பாடு. மும்பையும் ராமநாதபுரமும் ஒன்றாகிவிடுமா? 5 ஏக்கர் வைத்திருப்பதும் ராமநாதபுரத்தில் 5 ஏக்கர் வைத்திருப்பதும் ஒன்றாகிவிடுமா?
தெளிவில்லாத ஒரு போலி ஏற்பாடு. இதை மக்கள் புரிந்து கொள்வதற்கு வெகுநாட்கள் ஆகும். நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்பதற்காக இதை எதிர்த்து விட்டீர்கள் என்றால் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள். கேரளாவில் 2006-ல் தனியார் கல்லூரிகளில், மருத்துவக் கல்லூரிகளில் இதர பகுதியினருக்கு 12 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்கள்.
மாயாவதி உத்தரப் பிரதேசத்தில் கொடுத்துள்ளார். அதனால்தான் மாயாவதி மூன்று முறை அங்கு வர முடிந்தது. இது முழுக்க வாக்கு வங்கி அரசியலுடன் சேர்ந்துள்ளது. மக்கள் நலத்துடன் இணைந்தது அல்ல.
தமிழகத்தில் திமுக, அதிமுக இதை எதிர்க்கிறதே?
இங்கே தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் எதிர்க்கிறது. ஒப்புக்கொள்கிறோம். தமிழக சட்டப்பேரவையில் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம். இது ஒரு மோசமான சட்டம் என்று ஒரு தீர்மானம் போடச் சொல்லுங்கள் பார்ப்போம்.
லோக்சபாவில் அனைத்து அதிமுக உறுப்பினர்களையும் அவர்கள் வெளியேற்றி விட்டார்கள். இருந்தது ஒரே ஒருவர். அவர் தம்பிதுரை. அவர் நன்றாகப் பேசியதாக அனைவரும் சொன்னார்கள். ஆனால் அவர் என்ன சொன்னார் நான் இந்த அரசின் ஒரு அங்கமாக, துணை சபாநாயகராக இருப்பதால் இருப்பதால் இதை எதிர்க்க முடியவில்லை, என்று கூறி வெளிநடப்பு செய்தார்.
அப்படியானால் இந்தப் பதவியில் யாருடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்? எந்த அரசாங்கம் இந்த மசோதாவைக் கொண்டு வந்ததோ அந்த அரசாங்கத்துப் பதவியில்தானே ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள். மற்ற அதிமுகவினர் என்ன சொல்கிறார்கள், நாங்கள் 15 நாள் கழித்து கூட்டாகக் கூட செல்வோம். எதற்கு சண்டை என்று சொல்லி விட்டுச் செல்கிறார்கள். வெளிநடப்பு இரண்டு பேரும் பேசி வைத்து செய்த ஒன்றுதான். பாஜகவின் அனுமதியுடன் செய்ததுதான் வெளிநடப்பு.
எம்ஜிஆர் ஆட்சியில் 80களில் கிரீமிலேயர் முறை மார்க்சிஸ்ட்டுகள் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டது. அது என்ன அளவு?அதற்கும் இதற்கும் என்ன ஒற்றுமை?
அது சட்டமாக வரவில்லை. ஒரு அறிவிப்பு மட்டுமே. திமுக எதிர்த்த உடன் எம்ஜிஆர் அதை வாபஸ் வாங்கிவிட்டார். இதை எம்ஜிஆர் மட்டும் கொண்டுவந்தது மட்டுமல்ல. நீங்கள் பார்க்கப் போனால் மண்டல் கமிஷனிலேயே கிரிமிலேயர் இருக்கிறது. அதைச் சொன்னாலே இந்த சமூக நீதிக்காரர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
அதாவது வசதி படைத்தவர்களும் அவர்கள் சமூகத்தை சொல்லிக்கொண்டு இதை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால் அது எந்த சமூகமாக இருந்தாலும் பாதிக்கலாம்.
இதனால் பிராமணர்களுக்குப் பலன் அதிகம் என்கிறார்களே?
இதன் பலன் பிராமணர்களுக்குக் கிடைக்கிறதா என்பதை விட வடமாநிலங்களில் பார்த்தால் பிராமணர்களை விட மற்ற சமூகத்தினர் தான் முற்படுத்தப்பட்டவர்களாக அதிகம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிராமணருடைய சதவீதம் ஒன்றரை சதவீதம் மட்டுமே. 98 சதவீதத்துக்காக ஒன்றரை சதவீதம் பாதிக்கட்டும். பிரச்சினை இல்லை.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சைவ முதலியார்கள், வெள்ளாளர்கள், பிள்ளைமார்கள் உள்ளிட்ட பல சமூகத்தினர் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகிறார்கள். நான் ஏற்கெனவே சொன்னது போன்று தமிழ்நாட்டில் நாயுடு சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால் ஆந்திராவில் அவர்கள் முற்படுத்தப்பட்ட சமூகம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் தமிழ்நாட்டைப் போன்று எங்களையும் பிற்படுத்தப்பட்ட சமுதாய வகுப்பில் இணையுங்கள் என்கிறார்கள். அது இந்த மசோதாவிற்கு உதவி செய்கிறது.
கிரீமிலேயர் முறைக்கும் பாஜக அமல்படுத்தும் பத்து சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வித்தியாசம் எதுவும் உள்ளதா?
அப்படி நீங்கள் ஒன்றும் பிரித்துப் பார்க்க முடியாது. இது அமலாகப் போவதில்லை என்பதை மட்டும்தான் நான் இப்போது சொல்ல முடியும். இதை தேர்தல் பிரச்சாரமாக மட்டுமே மோடி பயன்படுத்தப்போகிறார் என்பதை மட்டும் இப்போது என்னால் கூறமுடியும். இதை எதிர்த்து தோற்கடித்தால் உங்களால்தான் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் போய்விட்டது என்று கூட்டத்தில் மோடி பேசுவார்.
இந்த மசோதாவை மார்க்சிஸ்ட் ஆதரிக்கிறதா?
கண்டிப்பாக ஆதரிக்கிறது. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தோம்.
மார்க்சிஸ்ட் நிலைப்பாடு தீர்மானத்தை ஆதரிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?
நீங்கள் எங்கள் முழு தீர்மானத்தின்மீது வைக்கப்பட்ட வாதத்தை முழுமையாகப் படியுங்கள். நாங்கள் எப்படி ஆதரித்து இருக்கிறோம் என்று பாருங்கள். இது முழுக்க நடக்கப்போவதில்லை என்று கூறித்தான் ஆதரித்துள்ளோம். மோடி தேர்தலுக்காக வித்தை காட்டுகிறார் என்றுதான் பேசியுள்ளோம்.
நாடாளுமன்றத்தில் பேசிய அத்தனை பேரும் அப்படித்தான் ஆதரித்துள்ளார்கள். காங்கிரஸும் அப்படித்தான் ஆதரித்துள்ளது. யாரும் மனப்பூர்வமாக மோடி முற்போக்காளர் ஆகிவிட்டார் என்று தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. கடுமையாக விமர்சனம் செய்து விட்டுத்தான் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்கள்.
எங்கள் சார்பாக தீர்மானத்தைப் பேசியவர் கேரள எம்.பி., கரீம். அதை முழுமையாக படித்தால் விவரம் தெரியும். நான் பேசவில்லை. தீர்மானம் எவ்வாறு தவறு என்று சிறிது நேரம் முன்மொழிந்து மட்டுமே பேசினேன். மார்க்சிஸ்ட் நிலைப்பாடு பற்றி முழுமையாக அறிய வேண்டுமென்றால் எங்களுடைய தீர்மானம் பத்திரிகைகள் வந்திருக்கிறது. அதை முழுமையாகப் படித்தால் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT