Published : 12 Jan 2019 08:12 AM
Last Updated : 12 Jan 2019 08:12 AM

மக்கும் தன்மை குறித்து ஆய்வு நடக்கிறது; மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளின் மக்கும் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதால், அவற்றுக்கும் தடை விதிக்கப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை கடந்த 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் இயங்கும் பெருவணிக வளாக கடைகளில், 100 சதவீதம் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பை என தாங்களாகவே அறிவித்துக்கொண்டு, அந்த விவரங்களை அச்சிட்டு பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்) ஆய்வு செய்ததன் எண்ணை குறிப்பிட்டு, இது 100 சதவீதம் மக்கும் தன்மை உடையவை என பைகளில் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்தப் பைகள் உண்மையில் மக்கும் தன்மையுடையதா, அதுகுறித்து அரசு தரப்பில் பரிசோதனை நடத்தி உறுதி செய்யப்பட்டுள்ளதா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுகிறது. மேலும் பெருவணிக நிறுவனங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சோதனையிடுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகள், தாவரங்களில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது வழக்கமான பிளாஸ்டிக் பைகளைப் போல அல்லாமல், பட்டுத் துணியைப் போல வழவழப்பாக இருக்கும். சிப்பெட்டில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பையை ஆய்வு செய்து, அதன் மக்கும் தன்மை குறித்து சான்றளிக்கிறோம். பிளாஸ்டிக் பை என்பதை கண்டுபிடிக்க 3 நாட்களும், மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் என்பதை கண்டுபிடிக்க 180 நாட்களும் ஆகும். மக்கும் தன்மையுள்ளதாக இருந்தால், நாங்கள் உருவாக்கும் செயற்கை சூழலில் 180 நாளில் மக்கிவிடுகிறது. இயற்கை சூழலில் இது மக்க ஓராண்டு வரை ஆகும். சிப்பெட் பரிசோதனை விவரங்களை மட்டுமே கொண்டு பிளாஸ்டிக் பைகளை, மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பை என விநியோகிக்கக் கூடாது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷம்பு கல்லோலிகர் கூறியதாவது:நடைமுறைகளின்படி, குறிப்பிட்ட பையை சிப்பெட் நிறுவனத்தில் கொடுத்து மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் பை என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்று, அதன் விவரங்களையும் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பையில் போட வேண்டும். அப்போதுதான் அதை மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பையாக ஏற்க முடியும்.

பிளாஸ்டிக் பையும் மக்கும் தன்மையுள்ளதுதான். அதற்கு 400 ஆண்டுகள் ஆகும். ஏற்கெனவே பிளாஸ்டிக் தடை தொடர்பாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செல்வம் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகம், சிப்பெட், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளைக் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகள் எத்தனை நாட்களில் மக்கும் என ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதுவரை ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு அனுமதிக்காத நிலையில் பெருவணிக நிறுவனங்களில் ‘மக்கும் தன்மையுள்ள’ என்ற பெயரில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் பைகள் என விநியோகிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்து வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x