Published : 25 Jan 2019 12:43 PM
Last Updated : 25 Jan 2019 12:43 PM
கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஈர்க்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கிறதா? என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழக அரசு 3 லட்சத்து 431 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் தனியார் நிறுவங்களின் விவரங்களை ஆராயும் வகையில் விதிகளை வகுக்க கோரி காஸ்கேட் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
2015-ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராயாததால், பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் இத்தாண்டுக்கான உலக முதலீட்டாளர் மாநாட்டில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக செலவு செய்து நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொழில்களாக மாறி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஈர்க்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கிறதா? என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT