Published : 17 Jan 2019 06:03 PM
Last Updated : 17 Jan 2019 06:03 PM

காணும் பொங்கல்; மெரினாவில் குழந்தையைத் தொலைத்த பெற்றோர்கள்: வயிற்றில் பால் வார்த்த காவல் அதிகாரி- நெகிழ்ச்சிப் பேட்டி

காணும் பொங்கலுக்கு மெரினாவுக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் குழந்தையைத் தவறவிட்டு கதறிய காட்சிகள் தொடர்கதையாக நடந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து பெற்றோர் வயிற்றில் பாலை வார்த்தார் ஒரு காவல் அதிகாரி.

காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் விசேஷமான ஒரு பண்டிகை. சென்னையைப் பொறுத்தவரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, சுற்றுலாப் பொருட்காட்சி, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சினிமா திரையரங்குகள் என பல வகைப்படும்.

இதில் முக்கியமாக மெரினா கடற்கரையில் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள். ஆண்டுதோறும் இன்பமான நிகழ்வில் சில குடும்பங்களுக்கு மட்டும் துன்பகரமான நிகழ்வாக மாறிவிடும். அது அவர்கள் வீட்டுக் குழந்தைகள் தொலைந்து போய்விடுவதுதான். குழந்தையைத் தொலைத்துவிட்டு பல பெற்றோர்கள் அழுதுகொண்டே போலீஸாரிடம் முறையிடுவார்கள்.

போலீஸாரும் தேடுவார்கள். நீண்ட தேடலில் மீட்கப்படும் குழந்தைகள் உண்டு காணாமல் போன குழந்தைகளும் உண்டு. இதை ஒரு காவல் அதிகாரி நேரடியாகக் கண்டு பெற்றோரின் துன்பத்தை தீர்க்க ஒரு வழி கண்டுபிடித்தார். அதன் பின்னர் குழந்தை காணாமல் போகும் பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்பட்டது.

திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக பதவி வகித்தவர் பீர் முகமது. இவர் 2013-ம் ஆண்டு காணும் பொங்கல் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது நூற்றுக்கணக்கான குழந்தைகள் காணாமல் போனதைக் கண்டார். அதைத் தடுக்க என்ன வழி என்று யோசித்தபோது அவர் மனதில் ஒரு யோசனை உதித்தது.

கடற்கரைக்கு அழைத்து வரப்படும் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க குழந்தைகள் கையில் பட்டை ஒன்றை கட்டி அதில் தொடர்பு எண்களை எழுதி அனுப்பினால் என்ன? குழந்தைக்கு முதலில் தான் யார் என சொல்லத் தெரியாததால்தான் காணாமல் போனால் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

ஆகவே குழந்தையின் கையிலேயே விவரம் இருக்கும் வகையில் பெற்றோர், காவல் துறையினரின் தொடர்பு எண்ணுடன் குழந்தையின் கையில் பட்டை கட்டிவிடும் முறையைக் கொண்டுவந்தார். அது பெற்றோருக்கு பேருதவியாக இருந்தது.

தற்போது ஓய்வுபெற்றுவிட்ட காவல் அதிகாரி பீர் முகமதுவிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

இந்த யோசனை உங்களுக்கு எப்படித் தோன்றியது?

லட்சக்கணக்கில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பெற்றோர்கள் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு தேடும்போது அவர்கள் தவித்த தவிப்பு காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்ததில் வந்த யோசனை இது.

எந்த ஆண்டு முதல் அமல்படுத்தினீர்கள்?

2013-ல் நான் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக இருந்தபோது ஆரம்பித்தது, குழந்தைகள் கையில் பட்டை கட்டி அதில் பெற்றோர் செல்போன் எண், காவல்துறையின் தொடர்பு எண் எழுதி அனுப்புவோம். அடுத்து நான் ஓய்வுபெறும்வரை மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக இது செயல்பாட்டில் இருந்தது.

அவ்வளவு பெரிய கூட்டத்தில் உங்களை நாடி பெற்றோர் எப்படி குழந்தைகளை அழைத்து வருவார்கள்?

இதற்கு ஒரு யோசனை கண்டுபிடித்தோம். 10 ஆயிரம் பலூன்களை வாங்கினோம். அதை இலவசமாகக் கொடுத்தோம். பலூனை வாங்கும் ஆர்வத்தில் குழந்தைகளே பெற்றோரை எங்களை நோக்கி இழுத்து வந்தார்கள்.

பின்னர் பலூன், சாக்லெட் என ஆண்டுதோறும் குழந்தைகளைக் கவரும் ஏதாவது ஒன்றைக் கொடுத்து அவர்கள் கையில் பட்டையைக் கட்டிவிட்டோம். பெற்றோர்களிடம் அதிக அளவில் இந்த முறை வரவேற்பைப் பெற்றது.

ஆரம்பத்தில் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டனர்?

ஆரம்பத்தில் 90 குழந்தைகளை மீட்டோம். பின்னர் 45 ஆகக் குறைந்து பிறகு குழந்தைகள் காணாமல் போவதே குறைந்து போனது.

இது உயர் அதிகாரிகளால் எப்படிப் பார்க்கப்பட்டது?

நல்ல வரவேற்பு இருந்தது பாராட்டினார்கள். பின்னர் இதற்காகவே கடற்கரை முழுதும் பூத்துகள் அமைக்கப்பட்டு இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு பீர் முகமது தெரிவித்தார்.

பீர் முகமது அறிமுகப்படுத்திய இந்த முறை ஆண்டுதோறும் போலீஸாரால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளும் இந்த முறையை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இது பெற்றோர் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இதனால் குழந்தைகள் காணாமல் போவது தடுக்கப்படுகிறது.

அல்லது காணாமல்போன சில நிமிடங்களில் யாராவது ஒருவர் குழந்தையின் கையில் உள்ள செல்போன் எண்ணில் பெற்றோர் அல்லது போலீஸாரை தொடர்புகொண்டு குழந்தையை ஒப்படைக்கின்றனர். இதில் காணாமல் போகும் பல குழந்தைகள் நேரடியாக பெற்றோர் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளப்பட்டு ஓப்படைக்கப்படும் நிகழ்வும் நடக்கிறது. இதனால் போலீஸின் உதவி கோராமலேயே பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுகிறது என்கிறனர் போலீஸார்.

உதவி கமிஷனர் ஒருவரின் யோசனை ஆண்டுதோறும் பல பெற்றோரின் வயிற்றில் பாலை வார்க்கும் நிகழ்வாக தொடர்வது பாராட்டத்தக்க ஒன்று. உதவி கமிஷனர் பீர் முகமது 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது மீட்புப் பணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தவர், தன்னால் முடிந்த நிதி உதவியையும் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x