Published : 23 Jan 2019 01:18 PM
Last Updated : 23 Jan 2019 01:18 PM

ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அரசு பணத்தில் நினைவிடம் அமைக்கக் கூடாது. மக்களின் வரிப் பணத்தை, பள்ளிகள்,  சுகாதார வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முதன்மையான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைக்க கூடாது. அப்படி நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். இனிமேல் மெரினாவில் நினைவிடங்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது" என குறிப்பிட்டிருந்தார்.]

இந்த வழக்கில் மனுதாரர், அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, அரசு நிதியில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கறிஞர் எம்.எல்.ரவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாக ஜெயலலிதா இறந்துவிட்டதால் தண்டனை அறிவிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், அதனடிப்படையில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என்ற அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

எதிர்காலத்தில் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக இல்லாமல், பொது மக்கள் நலன் சார்ந்த கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளுக்கானதாக இருக்க வேண்டும் என தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x