Published : 09 Jan 2019 08:25 AM
Last Updated : 09 Jan 2019 08:25 AM

எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தால் அரசியல்வாதிகள் கலக்கம்: மீதமுள்ள 319 வழக்குகளின் விசாரணை தீவிரம்

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிபோக காரணமாக இருந்த எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், தற்போது அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தும் நீதிமன்றமாக மாறியுள்ளது.

பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினிகுமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘எம்பி, எம்எல்ஏக்கள் மீதுள்ள ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டுமெனவும் இந்த வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமெனவும் கடந்த 2017-ல்மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு கீழமை நீதிமன்றங்களில் முன்னாள் மற்றும் இந்நாள் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீது நிலுவையில் இருந்த 1,581வழக்குகள் இந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 நீதித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன், ரூ. 97 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜெ.சாந்தி பதவி வகித்து வருகிறார். அரசு குற்றத்தொடர்புத் துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞராக காயத்ரி ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நீதிமன்றத்துக்கு தமிழகம் முழுவதும் இந்நாள் மற்றும் முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள 321 வழக்குகள் மாற்றப்பட்டன. இதில் அவதூறு வழக்குகளும் அடக்கம்.

இதில் பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு பாலியல் வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து முதல் தீர்ப்பளித்து கவனத்தை ஈர்த்தது இந்த நீதிமன்றம். பின்னர் இரண்டாவதாக விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் அவர் பதவி பறிபோனது. அடுத்தடுத்த அதிரடி தீர்ப்புகளால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இந்த சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டபோது இதை சாதாரணமாக எடை போட்ட அரசியல்வாதிகள் தற்போது தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் என்ன தீர்ப்பு வரப்போகிறதோ என கலவரமடைந்துள்ளனர்.

இந்த நீதிமன்றத்தைப் பொறுத்தமட்டில் எஞ்சிய 319 வழக்குகளையும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வேகமாக முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் நீதிபதி ஜெ.சாந்தி பணிகளை முடுக்கி வருகிறார். இதனால் விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் இந்த நீதிமன்றம் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது திமுக தலைவர் மு.க.

ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், வைகோ, டிடிவி தினகரன், கே.என்.நேரு, புதுச்சேரி எம்எல்ஏ அனந்தராமன், முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், சாந்திராம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் மீதுள்ள குற்றவியல் மற்றும் அவதூறு, ஊழல் வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான சில வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான வழக்குகள் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்படும் நிலையில் உள்ளதால், விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எம்பி, எம்எல்ஏக்கள் மீது வழக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில் 992 வழக்குகளுடன் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்திலும், 331 வழக்குகளுடன் ஒடிசா இரண்டாவது இடத்திலும் 319 வழக்குகளுடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x