Published : 20 Apr 2014 10:44 AM
Last Updated : 20 Apr 2014 10:44 AM
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் செல்போன், இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது பிரச்சாரத்தை அதிமுக தீவிரப் படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு தேதியான 24-ம் தேதிக்கு இன்னும் 4 நாள்களே இருப்பதால், அனைத்து கட்சிகளும் கடைசி கட்ட பிரச்சாரத்தை மும்முரமாக தொடங்கியுள்ளன.
மற்ற கட்சிகளின் தலைவர்கள் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவர்களுக்கு ஈடுகொடுக்கும் உத்தியாக செல் போன், இன்டர்நெட் போன்ற புதிய தொழில்நுட்பம் மூலம் செய் யப்படும் பிரச்சாரத்துக்கு அதிமுக மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் குறிப்பாக, இளம் வாக்காளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களைக் குறிவைத்து அதிமுக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதிமுக இணைய தளத்தில் இருந்து பல்லாயிரக்கணக் கானோரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு, ஜெயலலிதாவின் புகைப்படம் மற்றும் அதிமுக கட்சிக் கொடி பின்னணியுடன் கூடிய பிரச்சார வாசகங்கள் அடங்கிய இ-மெயில்கள் கடந்த சில தினங்களாக அனுப்பப்பட்டு வருகின்றன.
இதுதவிர, தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான செல்போன் வாடிக்கையாளர்களுக்கு, முதல்வரின் சில நிமிட பிரச்சார வாசகங்கள் அடங்கிய பதிவு செய்யப்பட்ட அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.
இது பற்றி சென்னையை சேர்ந்த ஏர்செல் வாடிக்கையாளர் ராஜூ கூறுகையில், “எனக்கு கடந்த சில நாட்களாக 9114என்று தொடங்கும் ஒரு எண்ணிலிருந்து அடிக்கடி அழைப்பு வருகிறது. அதில் முதல்வர் ஜெயலலிதாவின் குரலில் பிரச்சார வாசகம் அடங்கிய 1 நிமிட விளம்பரம் கேட்கிறது. இதுபோல் எனக்குத் தெரிந்த பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது” என்றார்.
இதுதவிர, கடந்த சில தினங்களாக நிறுத்தப்பட்டிருந்த “அம்மா வாய்ஸ்” சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘அம்மா வாய்ஸ்’ சேவைக்கான எண்ணைத் தொடர்பு கொண்டால், அழைப்பவரின் எண்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் ஆவதாக மீண்டும் தகவல் பரவியது. அதை நம்பி பலரும் அந்த எண்களுக்குத் தொடர்பு கொண்டனர். ஆனால், ரீசார்ஜ் ஆகாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT