Published : 28 Jan 2019 02:38 PM
Last Updated : 28 Jan 2019 02:38 PM
"உங்களுக்கு இந்த விருது கிடைத்தால், நீங்கள் அடையும் மகிழ்ச்சியை விட எங்களுக்கு மகிழ்ச்சி அதிகம். ஏனென்றால், எப்போதும் காயம்பட்டவர்களுக்கு திடுமென சுகம் கிடைத்தால் நினைத்துப் பாருங்கள். எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஒரு பெரும் துரத்தலில் இருந்து தடாகம் நிறைந்த மலர்ச்சோலையை அடைந்தது போலிருக்கிறது. நான் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல. நிறைய அவமானங்கள், கேலி, புறக்கணிப்புகளை எதிர்கொண்டிருக்கிறேன். என்னை கஷ்டப்படுத்திவிட்டு, அதனை நான் உணர்ந்து கொண்டேனா என சோதித்து சென்றவர்களும் உண்டு. ஆனால், இவற்றையெல்லாம் பார்த்து நான் அமைதியாகி நிற்கவில்லை. அவர்களை பார்த்து எனக்கு வேடிக்கையாக இருந்தது. என் இலக்கில் நான் உறுதியாக இருந்தேன்" என மகிழ்ச்சி அடைகிறார், பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ்.
சமீபத்தில், குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட 'பத்ம விருதுகளில்' நர்த்தகி நடராஜூக்கு 'பத்மஸ்ரீ' விருது கிடைத்துள்ளது. இதன்மூலம், பத்ம விருதைப் பெறும் முதல் மாற்றுப்பாலினத்தவர் என்ற பெருமைக்கு உரியவராகியுள்ளார் நர்த்தகி நடராஜ்.
எல்லோருடைய வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டு இருக்கும் நர்த்தகி நடராஜனை தொடர்புகொண்டு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு பேசிய போது, அவர் சொன்ன வார்த்தைகள் தான் மேற்கூறப்பட்டவை. உண்மை தான்.
மதுரை அனுப்பானடியில் செல்வ செழிப்பான குடும்பத்தில் 'நடராஜ்' ஆக பிறந்த நர்த்தகி நடராஜ், 7-8 வயதிலேயே தன் பாலினம் மீதான குழப்பங்களை உணரத் தொடங்கினார். சகோதரர்கள், சகோதரிகள் என 10 பேர் கொண்ட குடும்பத்தில், நர்த்தகி நடராஜ் திருநங்கையாக உணர்ந்தபோது, அதனை அவரது குடும்பமும் அவரது ஊரும் ஏற்றுக்கொள்ளவில்லை. திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குரல்கள் மெல்ல எழும் இந்த காலத்திலும், அவர்கள் குறித்த புரிதலின்மை குறைவு தான். அப்படியெனில் 1970-களில் சொல்லவே வேண்டாம்.
"இப்போது எனக்கு முதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கட்டுப்பாடு உள்ளது. ஆனால், சிறுவயதில் கட்டுப்பாடுகள் இல்லாமல் என் பெண்மையை வனப்பாக ரசித்தேன். மற்ற சிறுவர்களுடன் விளையாட பிடிக்காது. எனக்கு பெண் தோழிகள் தான் அதிகம். நான் நடனம் ஆடுவதால் எனக்கு பெண்மை வந்துவிட்டதோ என சொல்வார்கள். ஆனால், உண்மையில், என் பெண்மையை எடுத்துச் செல்வதற்கான களமாகத்தான் நடனத்தை எடுத்துக்கொண்டேன்.
என்னை திருநங்கையாக உணரத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் 'நீ பையன் மாதிரி இருக்கணும்'னு வீட்ல சொல்லுவாங்க. அப்படின்னா என்னன்னு எனக்கு தெரியாதப்ப நான் எப்படி பையன் மாதிரி இருக்க முடியும்? அவர்கள் சொல்வதை என்னால் செய்ய முடியாமல் போகிறபோது எனக்கு தண்டனைகள் கிடைக்கும்.
நான் செய்யாத குற்றத்திற்காக காயங்களை அனுபவித்தேன். அப்போது, என் பெற்றோர் மீதும், உடன்பிறந்தவர்கள் மீதும் கோபமும், ஆத்திரமும் ஏமாற்றமும் வந்தது. குடும்ப பாசம் எனக்கு அதிகம் உண்டு. குடும்பத்திலிருந்து வெளியேற நாங்கள் விரும்பவில்லை. வலுக்கட்டாயமாக நாங்கள் வெளியேறி வருகிறோம்", என கடந்த கால வலிமிகுந்த நாட்களை நினைவுகூறுகிறார் நர்த்தகி நடராஜ்.
சிறுவயதிலிருந்து இந்நாள் வரை நர்த்தகி நடராஜுவின் இணைபிரியா தோழி சக்திபாஸ்கர். 5-6 வயதிலிருந்தே அவருடன் இணைந்து பயணிக்கும் சக்தி பாஸ்கரும் திருநங்கை. பரதநாட்டியத்தில் இவருக்கும் பெரும் ஆர்வம். இருவரது குடும்பமும் பல தலைமுறைகளாக குடும்ப நண்பர்கள்.
இருவரும் இணைந்து 1980-களில் பல அவமானங்களைத் தாண்டி, நடனம் கற்க தஞ்சைக்குப் புறப்படுகிறார்கள். அங்கு, பிரபல பரத நாட்டிய நெறிமுறைகளை உருவாக்கிய தஞ்சை நால்வர் சகோதரர்களுள் ஒருவரான கே.பொன்னையா பிள்ளையின் மகனான, புகழ்பெற்ற நடனக்கலைஞர் கே.பி.கிட்டப்பாபிள்ளையைக் கண்டனர்.
"இப்போதாவது நான் திருநங்கை என்று சொல்லிக்கொண்டு தைரியமாக வெளியில் வர முடிகிறது. அந்த காலத்திலேயே 'நாங்கள் திருநங்கைகள் தான்' என்று திமிராக வெளியே வந்தவர்கள் நானும் சக்தியும். என் குரு கே.பி.கிட்டப்பாபிள்ளை என்னை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது இன்னும் ஆச்சரியமே.
இப்போது உயிருடன் இருந்திருந்தால் என்னை எப்படி மாணவியாக ஏற்றுக்கொண்டீர்கள் என கேட்டிருப்பேன். எங்கள் இருவர் மீதும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. எப்படியாவது மேல்நிலைக்கு வந்துவிடுவோம் என நம்பினார். அவரை மிக சாதாரணமாக நினைத்து அணுகினோம். உடனேயே மாணவிகளாக ஏற்கவில்லை.
எங்களின் பொறுமையை சோதித்தார். அதில் நாங்கள் சோர்ந்திருந்தால் வேறு திசையில் சென்றிருப்போம். நாங்களும் விடுவதாக இல்லை. வில்லில் இருந்து பாயும் அம்பு போன்று தயாராக இருந்தோம். ஒரு வருடத்திற்கு பின்பே மாணவிகளாக ஏற்றுக்கொண்டார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தது போன்று கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் பயின்றது" என்கிறார், நர்த்தகி நடராஜ்.
அதன்பிறகு கே.பி.கிட்டப்பா பிள்ளை இறக்கும் வரை நர்த்தகி நடராஜ் அவர் உடனேயே இருந்தார். தஞ்சை நால்வர் பரத நாட்டிய முறைகளை கற்று தேர்ந்த நர்த்தகி நடராஜூவுக்கு கே.பி.கிட்டப்பாபிள்ளை தான் 'நர்த்தகி' நடராஜ் என்ற பெயரையும் வைத்தார்.
15 ஆண்டுகள் குருவுடன் பயணித்த நர்த்தகி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார். மதுரை, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் பரதத்தை அரங்கேற்றினார் நர்த்தகி நடராஜன்.
குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் கலை என கருதப்படும் பரதநாட்டியத்தை தமிழ் சங்க இலக்கியங்கள் வழியாக நாட்டார் கலையாக உணர வைப்பதே நர்த்தகி நடராஜின் தனித்துவம் எனலாம். சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் மட்டுமல்லாமல், பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, என கவிகளின் வழியாகவும் பரதத்தை கடத்துகிறார்.
"எனக்கு மிகவும் இறை நம்பிக்கை உண்டு. ஆனால், நல்ல வேளை நான் தமிழச்சியாக பிறந்தேன் என கோடி, கோடி முறை சந்தோஷம் அடைந்திருக்கின்றேன். எல்லா மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் செல்கிறேன். ஆனால், தமிழகத்தில் இருக்கும் வளம் வேறெங்கும் இல்லை.
இங்குதான் பக்தியும் தேவையான சுயமரியாதையும் இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது. என்னால் 'சபா'விலும் ஆட முடியும். பக்தி சார்ந்த இடங்களிலும் ஆட முடியும். கிராமங்களுக்கு சென்றும் பரதநாட்டியத்தை ஆட முடியும். கிராம மக்களுக்கு இது புரியாது என்ற மாயை உள்ளது. பரதம் எனும் செவ்வியல் கலை வழியாக நமது நாட்டார் வழக்காற்றியலை பார்க்கும்போது செழுமையான கலை கிடைக்கும்" என, கூறுகிறார். நர்த்தகி நடராஜ்.
தற்போது புகழ்பெற்ற பரதக்கலைஞரான நர்த்தகி நடராஜ், வெள்ளியம்பளம் அறக்கட்டளை எனும் பெயரில் தமிழ்நாடு மட்டுமின்றி , கனடா, லண்டன், நார்வே போன்ற உலக நாடுகளில் பரதத்தைக் கற்றுக்கொடுக்கிறார். அவரது மாணவிகள் உலகெங்கும் அந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
"எந்தவொரு சமூகத்தை சார்ந்தவளாகவும் நான் இருக்கவில்லை. நான் ஒரு திருநங்கை. என்னை ஒடுக்க இதுமட்டுமே போதும். அதை முறியடித்துத்கான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். இன்று என் கண்களுக்கு எல்லோரும் நல்லவர்களாகத்தான் தெரிகிறார்கள்" என மெல்லிய புன்னகையுடன் கூறுகிறார் நர்த்தகி.
பரதத்தை உங்களின் உடல்-மன வலிகளைப் போக்கும் ஆயுதமாக பயன்படுத்துகிறீர்களா என கேட்டபோது மறுக்கிறார். "நடனம் ஆயுதம் அல்ல. எல்லாவற்றையும் நான் அதில் தேடுகிறேன். நடனத்தில் நான் புதைந்து போன, என்னை நானே புதைத்துக்கொண்ட தருணங்களும் உண்டு. அதுவே என் உயிர்நாடி, நடனம் இல்லையெனில் நான் இல்லை. அதனை வரையறுக்க முடியாது" என்கிறார்.
நர்த்தகி நடராஜைப் பொறுத்தவரை நடனம் உடலால் ஆடப்படுவதல்ல.
"நாட்டியம் உடலால் ஆடப்படுவது அல்ல என்பதை உணர்ந்திருக்கிறேன். நடனத்திற்கு நல்ல உடல்வாகு இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நடனத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டாம். அது உங்களை தேர்ந்தெடுக்கும். மேடையில் ஆடும் நான் வேறு, மேடையில் இருந்து இறங்கிவிட்டால் கீரைத்தண்டு போன்று ஆகிவிடுவேன். பாராட்டுகள் எதுவும் என் காதுகளுக்குள் செல்லாது.
கலைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நடனம் மீது காதல் கொண்டிருப்பவர்களால் எந்த தடையுமின்றி ஆட முடியும். அழகு, நிறம், உடல்வாகு, வயது நிச்சயம் தேவையல்ல" என்கிறார், நர்த்தகி நடராஜ்.
அழகு என்றால் உங்களை பொறுத்தவரை என்ன என்று கேள்விக்கு ‘‘ "நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லி பாராட்டியவர்களும் இருக்காங்க. புகழ்பெற்ற நடனக்கலைஞரிடம் சென்று புகைப்படக் கலைஞர் ஒருவர், அவர் என்னை மாதிரி இருப்பதாக கூறிவிட்டார். அந்த நடனக்கலைஞருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.
ஒரு திருநங்கையுடன் என்னை ஒப்பிடுவதா என கடிந்துகொண்டார். யோசித்துப் பாருங்கள், இதில், எங்கு அழகு இருக்கிறது? நான் நித்திய கல்யாணி. என் பேரனுக்கு பேரன் வந்தாலும் என்னை காதலிப்பான். அன்றும் நான் அழகாகத் தான் இருப்பேன். வார்த்தைக்கு சொல்லவில்லை. உள அழகு தான் அழகு" எனக் கூறுகிறார்.
பல இன்னல்கள், தடைகளைக் கடந்து நர்த்தகி நடராஜ் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்கிறார். அனைவருடனும் தொடர்பில் இருக்கிறார்.
"இப்போது அக்கா குழந்தைகள் எல்லோரும் அவ்வளவு அன்புடன் இருக்கின்றனர், சந்தோஷமாக இருக்கிறது. எவையெல்லாம் எனக்கு கிடைக்கவில்லை என ஏங்கினேனோ, அதனை கடவுள் இப்போது கொடுக்கிறார்" என்று மகிழ்ச்சியடைகிறார்.
மாற்றுப்பாலினத்தவர்கள் உங்களிடம் இருந்து எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டால், "எனக்கே சொல்லிக்கொள்வது போன்று சொல்கிறேன். நான் யாருக்கும் வழிகாட்டி இல்லை. என்னை முன்னோடி என சொல்கிறார்கள். ஒழுங்காக இருக்கிறோம். அந்த பாதையின் வெளிச்சம் எல்லோருக்கும் தெரிகிறது.
இப்போது மிகவும் ஆரோக்கியமான நிலை வந்திருக்கிறது. சருக்கல்கள் வரும்போது சாய்ந்துவிடக்கூடாது. நாமே ஒரு சமூகத்தை உருவாக்குவோம். சமூகம் என்பதற்கு உயர்ந்த நியதிகள் இருக்கிறது. கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். சுதந்திரம் எப்போது வருகிறதோ அப்போதே கட்டுப்பாடும் வர வேண்டும்" என தன் வெற்றிக்கு எது காரணம் என்பதை மீண்டும் தனக்கே சொல்லிக் கொள்கிறார் நர்த்தகி நடராஜ்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT