Published : 07 Jan 2019 10:22 AM
Last Updated : 07 Jan 2019 10:22 AM
கொத்தமல்லி இலை மற்றும் தனியா (மல்லி) ஆகியவை இரண்டும் சமையலில் தவிர்க்க முடியாத அங்கங்கள். ஆனால், உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லி சாகுபடி செய்த விவசாயிகள், விளைச்சலும் குறைந்து, விலையும் குறைந்துள்ளதால் கவலையடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், அதிக அளவாக உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 4,000 ஏக்கர் பரப்பளவில் மல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் மல்லிப் பயிரை கடந்த ஆண்டு நவம்பர் முதல் சாகுபடி செய்தனர். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். தற்போது பலரும் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலும், வடகிழக்குப் பருவமழையை நம்பி, மல்லியை மானாவாரியாக சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு உடுமலை மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு, வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த நன்மையை அளிக்கவில்லை. வழக்கமாக பெய்யும் மழை கூட பெய்யாமல் பொய்த்தது. மழையை நம்பி சாகுபடி செய்த பலரும் ஏமாற்றத்துக்குள்ளாகினர். பரம்பிக் குளம் ஆழியாறு பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தை சார்ந்திருந்தவர்களுக்கு மட்டும் ஓரளவு விளைச்சல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
உடுமலை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாக உலர் களங்களில், அறுவடை செய்த மல்லியை பக்குவப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் கூறும்போது, "3 ஏக்கரில் மல்லி சாகுபடி செய்தேன். போதிய மழை இல்லாததால், ஒரு ஏக்கருக்கு 4 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளது. (ஒரு மூட்டை என்பது 40 கிலோ ). மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.85.70 என குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனர். வேறு வழியின்றி விற்க வேண்டிய நிலை உள்ளது" என்றார்.
கணபதிபாளையம் விவசாயி ஆனந்தன் கூறும்போது, "ஏக்கருக்கு 12, 10, 8 மூட்டைகள் என விளைச்சல் கிடைத்துள்ளது. நிலத்தின் தன்மை, மழை உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு விளைச்சல் அதிகம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 வரை செலவானது. ஓரிரு மொத்த வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்ய வருவதால், மிகக் குறைந்த விலையே நிர்ணயம் செய்கின்றனர்.
அதிக வியாபாரிகள் வந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு கூடுதல் விலை கிடைக்கும். தற்போது கிலோ ரூ.83.75 பைசாவுக்கு கேட்கப்படுகிறது. கிலோ ரூ.100 கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் நஷ்டமின்றித் தப்ப முடியும். பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக எங்களிடம் கொள்முதல் செய்தால், லாபம் முழுவதும் எங்களுக்கே கிடைக்கும். இடைத்தரகர்களின் ஆதிக்கமும் குறையும்" என்றார்.
விலையைத் தீர்மானிக்கும் சந்தை
மல்லி சாகுபடி, சந்தை தொடர்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறும்போது, "விவசாயிகளின் விளை பொருள்களுக்கான விலையை, அதன் உற்பத்தியாளர்கள் தீர்மானிக்க முடிவதில்லை. வேளாண்மைக்குரிய அரசின் நலத்திட்ட உதவிகளை விவசாயிகளுக்கு கொண்டுசேர்ப்பது மட்டுமே எங்கள் பணி. விலை நிலவரங்களை சந்தைதான் தீர்மானிக்கிறது. மொத்த வியாபாரிகள் அல்லது நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். இதில் அரசுத் துறைகள் நுழைவதில்லை’ என்றார்.
மல்லி விதையின் பயன்கள் என்ன?
சளி, இருமல், ஒற்றைத் தலைவலி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரகப் பாதை நோய்கள் உள்ளிட்ட பல நோய்களைத் தீர்ப்பதற்கு மல்லி விதை உதவும். மேலும், வாயுத் தொந்தரவு, உணவு எதுக்களித்தல், செரிமானம் இல்லாமை போன்றவற்றுக்கும் மல்லி விதை சிறந்த மருந்து. வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கும் மல்லி விதையை உணவில் சேர்க்கலாம். சில தோல் நோய்களுக்கு மல்லி விதை எண்ணெய் தீர்வளிக்கிறது. டீ தயாரிக்கும்போது மல்லி விதை, சுக்கு கொஞ்சம் சேர்த்துக் கொதிக்கவிட்டு அருந்தினால் மலச்சிக்கல் நீங்கும். மல்லி விதையில் உள்ள 85 விதமான மணமூட்டும் எண்ணெய்களில், 26 வகை எண்ணெய்கள் மருத்துவக் குணமுள்ளவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT