Published : 28 Jan 2019 11:42 AM
Last Updated : 28 Jan 2019 11:42 AM

கடைசி நேரத்தில் மேடையில் இடம் பிடித்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்: ‘எய்ம்ஸ்’ விழா சுவாரஸ்யங்கள்

மதுரையில் நேற்று நடந்த பிரதமர் மோடி பங்கேற்ற எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் கடைசி நேரத்தில் தமிழக அரசு கொடுத்த நெருக்கடியால் விழா மேடையில் உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு இடம் கிடைத்தது.

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அடிககல் நாட்டு விழாவுக்காக நேற்று மதுரை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்திற்குச் சென்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,மத்திய இணைஅமைச்சர் பொ.ராதாகிருஷ்ணன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடி பங்கேற்ற இந்த விழாவில் கடந்த 4 நாளுக்கு முந்தைய நிலவரப்படி‘எய்ம்ஸ்’ விழா மேடையில் மிகவும் முக்கியமானநபர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், துணை சபாநாயகர் தம்பித்துரை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பொன். ராதாகிருஷ்ணன்,விஜயபாஸ்கர் போன்றவர்கள் பட்டியலே இடம்பெற்றிருந்தது.

மேலும், மதுரை அருகே எய்ம்ஸ்அமைந்தாலும் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அப்பகுதிஅமைந்துள்ளதால் மேடையில் பிரதமருடன் அமரும் வாய்ப்பு விருதுநகர் எம்.பி.ராதாகிருஷ்ணனுக்கு கடைசியில் கிடைத்தது. இவர்கள் பெயர்களே விழா அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது.

அதிருப்தியடைந்த உள்ளூர் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,செல்லூர் ராஜு ஆகியோர் முதல்வர் கே.பழனிசாமியிடம் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால், முதல்வர் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு விழா அழைப்பிதழில் பெயரைச் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, விழா மேடையிலாவது அவர்கள் இருவருக்கும் அமருவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கடைசிநேரத்தில் விழா மேடையில் உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூவுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்கும் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. அதனால், அவர்களும் நேற்று விழா மேடையில் அமர்ந்திருந்தனர்.

ஆனால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மற்ற அமைச்சர்கள், முன்வரிசையில் போடப்பட்டிருந்த பார்வையாளர்கள் இருக்கையில் அமரவைக்கப்பட்டனர்.

இதைப்பார்த்த விழா அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள், கட்சியினர், இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த விழாவே வேறு மாதிரி நடந்திருக்கும் என்று பழைய நினைவுகளை சொல்லி பேசிக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x