Published : 09 Jan 2019 10:19 AM
Last Updated : 09 Jan 2019 10:19 AM
பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை கவுண்டம்பாளையம் பகுதி உற்பத்தியாளர்கள் மண்பானைகள் உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது தித்திக்கும் பொங்கலும், கரும்பும்தான். விதவிதமான வகைகளில் பொங்கல் வைத்து அசத்துவார்கள், குடும்பத் தலைவிகள். ஆண்டு முழுவதும் அலுமினியம், சில்வர் பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகையன்று பொங்கல் வைப்பதற்கு, மண்பானைகளை பயன்படுத்துவது வழக்கம்.
இதன்படி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவை மாநகரில் அமைந்துள்ள கவுண்டம்பாளையம் பகுதியில், மண்பானைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர், அப்பகுதி மண்பாண்ட உற்பத்தியாளர்கள்.
இது குறித்து கவுண்டம்பாளையம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர் ஆர்.மாரிமுத்து கூறியதாவது:
''மண்பாண்டப் பொருட்கள் தயாரிப்பதற்கான செம்மண் ஆனைக்கட்டி, தடாகம், கணுவாய் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
ஒரு யூனிட் செம்மண் ரூ.3,500 கொடுத்து வாங்கி வருகிறோம். முதலில் மண்ணை நன்றாகக் காயவைத்துக் கொள்வோம். பின்னர் தண்ணீர் தெளித்து, நன்றாகப் பிசைந்து மிதித்து பதப்படுத்துவோம். மண்ணைப் பிசைந்து, மிதித்து தயார் செய்வது சிரமம் என்பதால், அப்பணியைச் செய்வதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். மண்ணை நனைத்து இயந்திரத்தில் கொட்டினால், அது நன்றாக பிசைந்து கொட்டும்.
பின்னர் அதை எடுத்து மண்பாண்டப் பொருட்கள் செய்வதற்கான சக்கரத்தில் வைத்துச் சுற்றவிட்டு தயார் செய்வோம். அதை சக்கரம் மூலமாகவும், இயந்திரம் மூலமாகவும் செய்து வருகிறோம். அதைத்தொடர்ந்து பானைகளைக் காயவைத்து, தட்டி சரிசெய்து, செம்மண் சாந்து பூசி வண்ணமாக்குவோம். பின்னர் சூளையில் வேகவைத்து எடுத்தால் பானைகள் தயாராகிவிடும்.
விதவிதமான மண்பானைகள், குழம்பு சட்டி, தண்ணீர் குடுவை, தண்ணீர் தொட்டி, விறகு அடுப்பு, உணவு எடுத்து வைக்கும் பாத்திரங்கள், சொம்பு, பூச்சட்டி, பொம்மைகள், விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரிக்கிறோம்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி எங்களுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். வியாபாரிகள் எங்களிடம் வந்து தேவையான அளவு பானைகளை வாங்கிச் சென்று, பொதுமக்களுக்கு விற்பர். பொதுமக்களும் நேரடியாக வந்து வாங்கிச் செல்வர். அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பானை விற்பனை நன்றாக நடைபெறுகிறது. தேவைக்கேற்றார்போல் நாங்களும் மண்பானை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.
அரிசி அளவுக்கேற்ப அரைப்படி பானைக்கு ரூ.60, ஒருபடி பானைக்கு ரூ.100, 2 படி பானைக்கு ரூ.175, 3 படி பானைக்கு ரூ.250, 4 படி பானைக்கு ரூ.300 விலை கிடைக்கிறது''.
இவ்வாறு மாரிமுத்து கூறினார்.
இது தொடர்பாக மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகையில், ''தற்போது மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கும் மூலப்பொருளான செம்மண்ணுக்கு கடும் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் அதிகளவில் மண்பானைகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் வந்தால் ஆட்கள் கூலி, சூளைக்கு விறகு, வைக்கோல், தண்ணீர், மின்சாரம் என செலவிட்டால், ரூ.10 ஆயிரம் மட்டுமே மிஞ்சுகிறது.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வரும் இத்தொழிலை இன்றைய தலைமுறையினர் தொடர விரும்பாததால், படிப்படியாக அழிந்து வருகிறது. அநேகமாக எங்களுடன் இத்தொழில் முடிந்துவிடும். ஆயிரக் கணக்கானோரால் செய்யப்பட்டு வந்த இத்தொழில், இன்று 100க்கும் குறைவானோர் மட்டுமே செய்கின்றனர். மற்றத் தொழில்களைப் இதை அவ்வளவு எளிதில் கற்றுக்கொண்டு செய்ய முடியாது.
நீண்டகாலக் கற்றலும், பயிற்சியும், பக்குவமும் அவசியம். இந்த பொறுமை எங்கள் வாரிசுகளிடம் இல்லை. இத்தொழில் அழியாமல் தடுக்க அரசு ஏதாவது திட்டத்தை அறிவித்து பாதுகாக்க வேண்டும்''என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT