Published : 28 Jan 2019 02:25 PM
Last Updated : 28 Jan 2019 02:25 PM
இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி ஏற்றபின் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், சங்க நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதால் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தல் மற்றும் பொதுக்குழு நடத்த கோரியும், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் தயாரிப்பாளர்கள் ஜெ. சதீஷ் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க நிதியில் முறைகேடு செய்திருப்பதாவும், பொதுக்குழு உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் ஓய்வுதிய தொகையை 12 ஆயிரமாக உயர்த்தியுள்ளதாகவும், இளையராஜா 75 நிகழ்ச்சி அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டிய பின் வழங்கப்படும் என விஷால் கூறும் நிலையில் இளையராஜாவுக்கு ஏன் 3.5 கோடி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தயாரிப்பாளர் சங்க நிதி குறித்து ஒரு ஆவணங்களை கூட நடிகர் விஷால் கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தயாரிப்பாளர் சங்க தலைவர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் இளையராஜா 75 நிகழ்ச்சியை ஏன் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும், 3,500 பேர் இந்த நிகழ்ச்சியை காண வரவிருப்பதாகவும், மனுதாரர்கள் இந்த நிகழ்ச்சியை நிறுத்த நினைக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.
அப்படியானால் நிகழ்ச்சிக்கான ஒப்பந்த ஆவணங்களை மனுதாரர்களிடம் ஏன் வழங்க கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து இளையராஜா நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை நாளை மறுநாளுக்குள் (புதன்கிழமை) தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT