Last Updated : 14 Jan, 2019 04:41 PM

 

Published : 14 Jan 2019 04:41 PM
Last Updated : 14 Jan 2019 04:41 PM

கிருஷ்ணகிரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 தலைமுறையினர் 12-வது ஆண்டாக ஒன்றுகூடினர்

கிருஷ்ணகிரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 தலைமுறையினர் 12-வது ஆண்டாக ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அருகே சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மரியப்பன் என்பவர் தனது மனைவி அந்தோணியம்மாளுடன் குடியேறினார். விவசாயம் செய்து வந்த இவர்களுக்கு 5 மகன்கள் இருந்தனர். வெங்காயக்காரர்கள் என்று அழைக்கப்படும் இவர்களது வம்சத்தினர், தற்போது சேலம், பெங்களூரு சென்னை, கிருஷ்ணகிரி உட்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று (திங்கள்கிழமை) கந்திக்குப்பத்தில் 12-வது ஆண்டாக ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8 மணியளவில் கந்திக்குப்பம் பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி மேளதாளத்துடன் ஊர்லமாகச் சென்றனர். பின்னர், அங்குள்ள கிங்ஸ்லி பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்தோர்கள் கவுரவிக்கப்பட்டனர். குழந்தைகள், பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.

இதுதொடர்பாக 8-வது தலைமுறையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஞானபிரகாசம் கூறும்போது, ''கடந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு வரை எங்களுக்கு சொந்தம் இல்லை என நினைத்திருந்தோம். மரியப்பன் வழியில் வந்த எங்களது சொந்தங்களை தேடி 3 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களுக்குச் சென்றோம். அதன்பயனாக தமிழகம் முழவதும் வெங்காயக்காரர்கள் வம்சத்தை சேர்ந்த 2 ஆயிரம் பேர் இருப்பது அறிந்தோம்.

மேலும், மரியப்பனின் 2 மகன்களில் ஒருவர் வெளிநாட்டிற்கும், மற்றொருவர் மத்தியப் பிரதேசத்திற்கும் சென்றதாக தகவல் கிடைத்தது. அவர்களையும் தேடி வருகிறோம். 12 ஆண்டுகளாக ஒன்று கூடி எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, உறவுகளை மேம்படுத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x