Last Updated : 23 Jan, 2019 10:30 AM

 

Published : 23 Jan 2019 10:30 AM
Last Updated : 23 Jan 2019 10:30 AM

பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களின் வினாத்தாளில் மாற்றம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான கணித வினாத்தாள்  மாற்றப்பட்டிருப்பது ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடக்க உள்ளன. இதில் 11-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டப் படி முதல்முறையாக பொதுத்தேர்வு நடக்கிறது. இதுதவிர மேல்நிலை வகுப்புகளுக்கான மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வு இல்லாத பாடத்துக்கு 90 மதிப்பெண்களுக்கும், செய்முறை தேர்வு உள்ள பாடத்துக்கு 70 மதிப்பெண்களுக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் ஒரு மதிப்பெண் பகுதியில் 20 கேள்விகளும், குறுவினா பிரிவில் 2 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், சிறுவினா பிரிவில் 3 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், பெருவினாக்கள் பகுதியில் 5 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும் என மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும்.

அந்த வகையில் கணிதம் உட்பட செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் கேட்கப்படும் 20 ஒரு மதிப்பெண் வினாக்களும் கொள்குறி வகையில், அதாவது சரியான விடையை தேர்வு செய்து பதிலளிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தன. இந்த முறையில்தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், செய்முறை தேர்வு இல்லாத பாடங்களுக் கான வினாத்தாளில் தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது. அதன்படி ஒரு மதிப்பெண் பிரிவில் இடம்பெறும் கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக, நுழைவுத் தேர்வு வடிவிலான வினாக்கள் இடம்பெறும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுத் துறை சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘மேல்நிலை வகுப்புகளில் செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் முதல் 20 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக சரியானவற்றைப் பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியான - தவறான இணைகளைக் கண்டறிக, கூறப்படும் கருத்துக்கான காரணத்தை எழுதுவது, சரியான - தவறான வாக்கியங்களைத் தேர்வு செய்வது என்பன போன்ற வடிவத்தில் வினாக்கள் இடம்பெறும்’ என்று கூறப்பட்டுள்ளது.

போதிய அவகாசம் இல்லை

இந்த திடீர் மாற்றத்துக்கு ஏற்ப தயாராவதற்கு போதிய அவகாசம் இல்லாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால் பழைய முறையிலேயே வினாக்களை மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கணித ஆசிரியர் விஜயகுமார் கூறியதாவது:

கல்வியாண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட பழைய முறைப்படிதான் ஆசிரியர்கள் பாடம் நடத்தியுள்ளனர். அதன்படியே காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரு மதிப்பெண் வினா பகுதியில் கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக ஜேஇஇ, நீட் தேர்வுகளைப் போல வினாக்கள் இருக்கும் என்று தேர்வுத் துறை கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இப்போது மாதிரி செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வுகள் நடக்க உள்ளன. போதிய கால அவகாசம் இல்லாமல் வினாக்கள் மாற்றப்பட்டிருப்பது சரியல்ல. இந்த மாற்றத்தை மாணவர்களுக்கு விளக்கி பயிற்சி அளிப்பது சிரமம்.  ஒரு மதிப்பெண் வினாக்களில்தான் மாணவர்கள் எளிதாக மதிப்பெண் பெற முடியும்.

எனவே, மாணவர்கள் நலனை கருதி ஏற்கெனவே பயிற்றுவித்த வினாத்தாள் போலவே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x