Published : 09 Sep 2014 10:37 AM
Last Updated : 09 Sep 2014 10:37 AM

தேதி குறிப்பிடப்படாமல் விநியோகமாகும் ஆவின் பால் - அச்சு அழியாமல் இருக்க விரைவில் புதிய இயந்திரம்: ஆவின் தகவல்

ஆவின் பால் பாக்கெட்கள் தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக மொத்தம் 21 லட்சம் லிட்டர் பால் விநியோகம் ஆகிறது. சென்னையில் மட்டும் 11 லட்சம் லிட்டர் பால் விற்கப்பட்டு வருகிறது. தனியார் பால் பாக்கெட் விலை அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக ஆவின் பால் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் பாக்கெட்களில் தேதி இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பெரம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் பாக்கெட்கள் தேதி இல்லாமல் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த கலைவாணி ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறுகையில், ''கடந்த சில நாட்களாக முகவர்கள் மூலம் போடப்படும் பாலில் தேதி குறிப்பிடப்படாமல் உள்ளது. ஒரு சில சமயங்களில் தேதி அழிக்கப்பட்டு முந்தைய நாள் பால் பாக்கெட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன'' என்றார்.

''தேதி குறிப்பிடாமல் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பால் தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது. சில சமயங்களில் பால் கெட்டுப் போய்விடுகிறது' என பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் கூறினார்.

ஆவின் நுகர்வோர் புகார் மையத்தை தொடர்பு கொண்டபோது, பாக்கெட்களில் தேதியை அச்சிடும் இயந்திரம் பழுதடைந்துள்ளது என தெரிவித்தனர்.

இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் 'தி. இந்து' நிருபரிடம் கூறும்போது, '' பழைய முறை அச்சு இயந்திரத்தில் இங்க் கொண்டு பால் பாக்கெட்டில் தேதி அச்சிட்டு வந்தது. இதனால் சில சமயங்களில் இங்க் அழிந்துவிடும். இது போன்ற பிரச்சினைகளைப் போக்க புதிய டிஜிட்டல் அச்சு இயந்திரம் இம்மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பழைய பால் பாக்கெட்களை விநியோகம் செய்யும் பூத்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x