Published : 18 Jan 2019 08:32 AM
Last Updated : 18 Jan 2019 08:32 AM
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது. தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, கடந்த சில மாதங்களாகவே பல்வேறு கட்டங்களாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பாஜகவின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்திலிருந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் 2-வது நாள் நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, காலை 8 மணிக்கு தமிழகத்தில் இருந்து சென்றிருந்த அனைத்து நிர்வாகிகளும் டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு, தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் தமிழக பொறுப்பாளரும் மத்திய ரயில்வே அமைச்சருமான பியூஸ்கோயல், துணைப் பொறுப்பாளரும், கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினருமான ரவி, அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பகுதி நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். விருந்து மற்றும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் ஸ்வெட்டர் வழங்கப்பட்டதாக, கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய தமிழக பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியைப்போல், சென்னையிலும் அமைச்சர் பியூஸ்கோயல் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக, அந்த நிர்வாகி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT