Published : 14 Jan 2019 10:33 AM
Last Updated : 14 Jan 2019 10:33 AM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுத் திருவிழாவுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் நாளை அமர்க்களத்துடன் தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாட்டும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்திருந்தது.
தமிழக மக்களின் வலிமையான போராட்டத்தால் தடைகளைத் தகர்த்தெறிந்த பின் 2017-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன.15, பாலமேட்டில் ஜன.16, அலங்காநல்லூரில் ஜன.17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடத்துவதில் விழாக் குழுவினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான ஒருங்கிணப்புக் குழு ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 6 துணை காவல் ஆணையர்கள், 15 உதவி ஆணையர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள் ளனர். 570 காளைகளுக்கு நேற்று வரை டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆட்சியர் நடராஜன் ஆய்வு செய்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசுத் தரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்ஸ் செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்திய குழுவினரும் பொது மக்களும் நல்ல ஒத்துழைப்புத் தருகின்றனர். சிலர் தானாகவே முன் வந்து பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். இவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது என்றார்.
பாலமேடு
பாலமேட்டில் நாளை மறுநாள் (ஜன.16) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், விழாக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
மஞ்சமலை ஆற்றுத்திட லில் வாடிவாசல், பார்வையாளர் களுக்கான கேலரி அமைத்தல், வாடிவாசலில் இருந்து காளைகள் ஓடும் தளத்தில் தேங்காய் நார் பரப்புதல், வெளியேறும் பகுதியைச் சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 800 காளைகளுக்கும், மாடுபிடி வீரர்கள் 800 பேருக்கும் நேற்று முன்பதிவு நடந்தது. வீரர்களுக்கு மருத்துவர் வளர்மதி மேற்பார்வையில் உடல் தகுதிச்சான்று வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
உலகப் பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக் கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதில் வெளிநாட்டினரும் பங்கேற்பர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 876 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 848 பேர் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஜன.14) நடைபெறுகிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பரிசுகளை அள்ள பயிற்சி தீவிரம்
மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை நீர்நிலைகளிலும், தோப்புப் பகுதிகளிலும் தயார்படுத்துவதில் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாடுபிடி வீரர்களும், களத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகளை அடக்கி பரிசுப் பொருட்களை அள்ளத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பாயூரணி, மேலூர், அலங்காநல்லூர், பாலமேடு, வரிச்சியூர், கருப்புக்கால் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் குழுக்களாக இணைந்து காளைகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT