Published : 28 Sep 2014 01:39 PM
Last Updated : 28 Sep 2014 01:39 PM
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் வன்முறையை தூண்டிவிட்டதாகக் கூறி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி வீடு அமைந்திருக்கும் கோபாலபுரம் பகுதிக்கு சென்று அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு குவிந்திருந்த திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கம்பு, கற்கள்மற்றும் கைகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் காயம் அடைந்த அதிமுகவை சேர்ந்த விமல், மோகன், அசோக், ஹரிகுமார், வேல்முருகன் ஆகியோர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்கள் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், "திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கோபாலபுரம் 2-வது தெருவில் எங்களை மறித்து தாக்குதல் நடத்தினார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் திமுகவினர் 20 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவினர் மீதும் வழக்கு
அதிமுகவினர் தாக்கியதில் திமுக எழும்பூர் பகுதி பிரதிநிதி ஸ்ரீதர் படுகாயம் அடைந்து புரசைவாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரதுதலையில் தையல் போடப்பட்டுள் ளது. ஸ்ரீதர் ராயப்பேட்டை போலீஸில் கொடுத்துள்ள புகாரில், "திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க கோபாலபுரம் சென்று அவரது வீடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தேன். என்னைப் போல் நிறைய தொண்டர்களும் அங்கு நின்றிருந்தார்கள்.
அப்போது அதிமுகவினர் கையில் கம்பு, கற்களுடன் வந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் என் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில் அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவினர் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதால் கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. காலனியில் உள்ள கருணாநிதியின் வீடுகள், ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீடு, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டத்தில் உள்ள அன்பழகன் வீடு, மயிலாப்பூரில் உள்ள சுப்பிரமணியன் சுவாமியின் வீடு மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய திமுக பிரமுகர்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT