Published : 03 Jan 2019 07:39 AM
Last Updated : 03 Jan 2019 07:39 AM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கும், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளி யிட்ட அரசாணையை எதிர்த்து, டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை தீர்ப்பாயம் அமைத்தது.
இக்குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து, பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்து, தமது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டு, கடந்த மாதம் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
தமிழக அரசு பிறப்பித்த அர சாணையை ரத்து செய்ததுடன், 3 வாரங்களில் ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து புதிய உத்தரவு வழங்கவும், ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவும் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அதிகாரம் கிடையாது
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், `வேதாந்தா குழுமத்தின் மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்திருக்கவே கூடாது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிரான இந்த மனுவை விசாரிக்கும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது.
தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரை
சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று காலை நிகழ்த்திய உரையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதாக அறிவித்தார். அதன்பிறகு, மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்ற உத்தரவு
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவைச் சேர்ந்த பாத்திமா பாபு, ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை செயல்படுத்த ஜனவரி 21-ம் தேதி வரை தடை விதித்தும், அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெர்லைட் விண்ணப்பம் நிராகரிப்பு
`ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம்’ என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து வழங்க வேண்டும். அபாயகரமான ரசாயன பொருட்களை கையாளும் அனுமதி அளிக்க வேண்டும். ஆலைக்கு வைக்கப்பட்டுள்ள சீலை திறக்க அனுமதிக்க வேண்டும். மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என, வேதாந்தா குழுமம் சார்பில் கடந்த மாதம் 19-ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிகர், ஸ்டெர்லைட் நிறுவன இணை துணைத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், `தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் உங்களது வேண்டுகோளை பரிசீலிக்க முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT