Published : 21 Jan 2019 10:58 AM
Last Updated : 21 Jan 2019 10:58 AM
காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டும், புதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் திறந்தவெளி மைதானம் மற்றும் மரத்தடி நிழலில் கல்வி கற்கின்றனர். இதனால், கவனச்சிதறல்கள் ஏற்படுவதாக மாணவர்களின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
காவேரிப்பட்டணம் ஒன்றியத் துக்கு உட்பட்டது குடிமேனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தேவீரஅள்ளி. இக்கிராமத்தில் கடந்த 1954-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. பள்ளியில், தேவீரஅள்ளி, தாமோதரஅள்ளி, கள்ளிப்பட்டி, குடிமேனஅள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
வானமே எல்லை
இப்பள்ளியில் தொடக்க நிலையில் பயிலும் 77 மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, ஒரு தலைமையாசியர், 2 ஆசிரியர்களும், நடுநிலை, உயர்நிலைப்பள்ளியில் ஒரு தலைமையாசியர், 6 ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளனர். இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டும் உயர் நிலைப்பள்ளிக்கென கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவில்லை. தொடக்க, நடுநிலைப்பள்ளி வகுப்புகளுக்கு கட்டப்பட்ட வகுப்பறைகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிரமத்துடன் கல்வி பயிலும் நிலையுள்ளது.
போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழல் மற்றும் திறந்தவெளி மைதானத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையுள்ளது. மரத்தடி நிழல் இயற்கை சூழல் என்றாலும், வெயில் மற்றும் மழைக்காலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கவனச்சிதறல்
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர், அப்பகுதி மக்கள் கூறியதாவது:இப்பள்ளியில் 14 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி படித்து வருகின்றனர். பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாததால், திறந்தவெளியில் கல்வி கற்க வேண்டிய நிலை காணப்படுகிறது. வெளியில் அமர்ந்திருக்கும் போது, சுற்றுவட்டாரங்களில் திருவிழாக்கள் நடைபெறும் போது, அதிக ஒலி எழுப்பும் ஓசையால் மாணவர்கள் கவனச்சிதறல் ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
பேருந்து வசதி குறைவு
இதேபோல காவேரிப் பட்டணத்தில் இருந்து தேவீரஅள்ளிக்கு அரசுப் பேருந்து (தடம் எண் 69) இயக்கப்படுகிறது. இப்பேருந்து காலை 7 மணி, பிற்பகல் 1.30 மணி, மாலை 7 மணியளவில் இயக்கப்படுகிறது. இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் சுமார் 5 முதல் 3 கிமீ தூரம் பள்ளிக்கு நட ந்தே வரும் அவலநிலை உள்ளது. இப்பள்ளிக்கு, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் இருந்து வரும் ஆசிரியர்களும் போதிய பேருந்து வசதி இல்லாததால், வேறு பள்ளிக்கு மாறுதல் கேட்கும் நிலை உள்ளது. எனவே, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT