Published : 28 Jan 2019 11:22 AM
Last Updated : 28 Jan 2019 11:22 AM
உள்நாட்டிலேயே குறைந்த செலவில் உயிரி தொழில்நுட்பத்தில் மக்கும் தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் மூலப் பொருட்களை தயாரிப்பதற்கான ஆய்வில் மத்திய அரசின் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்) ஈடுபட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1-ம்தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் உயிரி தொழில்நுட்பத்தில் மக்கும் தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான மூலப் பொருட்களை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் அதிக செலவு பிடிக்கிறது. இதனால் விலையும் அதிகமாக உள்ளதால், வியாபாரிகளும் பொதுமக்களும் இதனை வாங்க தயங்குகின்றனர்.
இந்நிலையில், உள்நாட்டிலேயே குறைந்த விலையில் உயிரி தொழில்நுட்பத்தில் மக்கும் தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் மூலப் பொருட்களை தயாரிக்கும் ஆய்வில் மத்திய அரசின் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்) ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பாலி எத்திலீன் என்ற மூலப் பொருளால் தயாரிக்கப்படுவதால் அவை பூமியில் மக்குவதில்லை. இதனால், விளைநிலங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு மாற்றாக பாலி லேக்டிக் ஆசிட் மற்றும் பிபிடி பாலிமர் (Poly butylene adipate-co-terephthalate) மற்றும் ஆழ்வள்ளிக் கிழங்கு உள்ளிட்ட தாவரங்களில் இருந்து கிடைக்கும் கேசவா ஸ்டார்ச் போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க ஆராய்ச்சிநடக்கிறது. ஐஎஸ்ஓ-17088 என்றதரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவை 180 நாட்களுக்குள் 90 சதவீதம் மக்கும் தன்மை கொண்டவை.
ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள், ஸ்பூன்கள், ஜுஸ் கப்புகள் உள்ளிட்டவை இந்த பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கலாம். இந்த சோதனை முடிந்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம், குறைந்த விலையில் மூலப் பொருட்களை வாங்கி உற்பத்தியாளர்கள் பொருட்களை தயாரிக்கலாம். இது சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT