Published : 21 Jan 2019 01:21 PM
Last Updated : 21 Jan 2019 01:21 PM
பொருளாதார ரீதியிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, சாதி ரீதியாக மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. முழுமையான ஆய்வு மேற்கொள்ளாமல் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நடைபெற்றது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முன்வைத்த வாதம்:
"பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சமத்துவ உரிமைக்கு எதிரானது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொருளாதாரம் என்பது நிலையற்ற தன்மை கொண்டது. அது மாறக்கூடியது என்பதால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் உள்ள பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தில் 8 லட்சம் ரூபாய் நிர்ணயம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாட்டில் 97% பேர் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவான வருமானம் கொண்டவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் "இட ஒதுக்கீடு வழங்கும் போது பொருளாதார அளவீடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது" என கருத்து தெரிவித்தனர்.
அதற்கு வில்சன் பதிலளிக்கையில், "சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பொதுப்பிரிவினருக்கு அல்ல என அரசியல் சாசனம் தெரிவித்துள்ளது" என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராஜகோபாலன், "மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி நாடாளுமன்ற உறுப்பினர். இந்தச் சட்டர்க் திருத்ததிற்கு எதிராக வாக்களித்தவர். அங்கு வெற்றி பெற முடியாததால் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். இந்தச் சட்டத் திருத்தத்தால் தனிப்பட்ட முறையில் அவர் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. பொதுநல வழக்காக இந்த மனுவைத் தாக்கால் செய்ய ஆர்.எஸ்.பாரதிக்கு முகாந்திரம் கிடையாது. அரசியல் லாபத்திற்காகவே ஆர்.எஸ்.பாரதி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப்போவது மாநில அரசு தான்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT