Published : 14 Jan 2019 11:18 AM
Last Updated : 14 Jan 2019 11:18 AM

பொங்கல் பண்டிகைக்கு பறவைகள் கணக்கெடுப்பு: கேரளாவைப் பின்பற்றி தமிழகத்திலும் பறவையியல் ஆர்வலர்கள் ஏற்பாடு

கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையொட்டி பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவதுபோல், தமிழகத்திலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பறவையியல் ஆர்வலர்கள், பறவைகள் கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் திருவிழா ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமில்லாமல் இயற்கை ஆர்வலர்களுக்கும், பறவை ஆர்வலர்களுக்கும் ஒரு திருவிழாவாக மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக பறவையியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களால் மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் தசரா பறவை கணக்கெடுப்பு, ஓணம் பறவைகள் கணக்கெடுப்பு என்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இம்மாநிலங்களைப் பின்பற்றி 2016-ம் ஆண்டு முதல் பொங்கல் விடுமுறை நாட்களில் தற்போது பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பறவையியல் ஆர்வலர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 'இறகுகள்' அமைப்பின் உறுப்பினர்களும், கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் ரவீந்திரன் நடராஜன் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்.

இது குறித்து பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் கூறுகையில், "இந்த பறவைக் கணக்கெடுப்பில் பறவைகளை காண்பதில் ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் எங்கு இருந்து வேண்டுமானாலும் பங்குகொள்ளலாம். குறிப்பிட்ட அந்த 4 நாட்களில் ஒருநாளின் காலையிலோ,மாலையிலோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில மணிநேரங்களில் என்ன என்ன பறவைகள் காண்கிறார்களோ அதை எல்லாம் பட்டியலிட்டு அப்பட்டியலை www.ebird.org/india என்ற வலைதளத்தில் உள்ளிடவேண்டும்.

பொதுவாக பறவைகள் நமது சுற்றுச்சூழலின் குறியீடு என்பார்கள். நாம் எத்தகைய ஆரோக்கியமான சூழலில் வாழ்கிறோம் என்பதை நம்மைச் சுற்றிலும் வாழும் பறவைகளின் வகைகளைக் கொண்டும் பறவைகள் எண்ணிக்கையைக் கொண்டும் எளிதாக அறியலாம். பறவைகளை அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளில் பல பகுதியில் இருந்து கணக்கெடுப்பதால் என்ன நன்மை ஏற்படும் என்றால் தமிழகம் முழுவதும் வாழும் வாழ்விடப் பறவைகளும், வலசைப் பறவைகளும் எவ்வளவு இருக்கும் என்ற பொதுவான மதிப்பீடு கிடைக்கும். இதனைக் கொண்டு பழைய பட்டியலுடன் ஒப்பீடு செய்யும்போது ஒவ்வொரு பகுதியின் சூழல் மாற்றம், தட்பவெப்ப மாற்றம், உணவு ஆதாரங்கள் குறைந்து வருவது என பல விஷயங்களை அறிந்துகொள்ளலாம்.

மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினால் மக்கள் நான்கு சுவருக்குள் கட்டிப்போடப்படாமல் நமக்கு தேவையான சூழல் அறிவை பெறவும்,ஆரோக்கியமான சூழலில் நேரம் செலவிடவும் இந்த பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு உதவி செய்கிறது.

இந்த நிகழ்வில் இயற்கை ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலரும் தமிழகத்தின் குறிப்பிட்ட ஒருசில பகுதிகளை தேர்வு செய்து அங்கே சென்று கணக்கெடுக்கிறார்கள். பல பெண்கள் தங்களின் வீட்டு தோட்டத்திலும், மாடியிலும் இருந்தும் கூட பறவைகளைக் கண்டு பதிவிடுகிறார்கள். மேலும், இதில் எவ்வாறு பங்கேற்பது என்ற விளக்கம் தேவைப்பட்டால் https://birdcount.in/event/pongal-bird-count-2019_tamil/ என்ற வலைதளம் சென்றுபார்த்தால் மிக விளக்கமாக அதில் பதியப்பட்டு இருக்கும்.

பறவைகள் காணல் என்பது ஒரு பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கான கல்வி" என்றார் ரவீந்திரன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x