Published : 09 Jan 2019 11:40 AM
Last Updated : 09 Jan 2019 11:40 AM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "14 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தால் வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து பொதுமக்கள் வெளியூர்களுக்கு அதிகமாகச் செல்வார்கள் என்பதால், அதிக பேருந்துகளை முன்னெச்சரிக்கை ஏற்பாடாக செய்திருக்கிறோம்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினசரி இயக்கக்கூடிய 2,275 சிறப்புப் பேருந்துகள் தவிர 5,163 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. மொத்தம் 14,263 பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்காக தமிழக போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னையிலிருந்து இயக்கப்பட இருக்கிறது. மற்ற ஊர்களுக்கு 10,445 பேருந்துகள் என மொத்தம் 24,708 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.
பேருந்து நிலையங்களைப் பிரித்து பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது.
அதேபோல, ஈ.சி.ஆர். மார்க்கமாக கடலூர், பாண்டிச்சேரி செல்லக்கூடிய பேருந்துகள் கே.கே.நகர் அரசு போக்குவரத்துக் கழக நிலையத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது.
விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக, கும்பகோணம், தஞ்சாவூர் வரை செல்லக்கூடிய பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது.
திண்டிவனம் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள், திருவண்ணாமலை மற்றும் திருச்சி செல்லக்கூடிய பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது.
வேலூர், ஆரணி, ஆற்காடு, ஓசூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது.
விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணமாலை மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது.
திருவண்ணாமலை, ஆரணி போன்ற ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்துலிருந்தும் இயக்கப்படும்.
பேருந்து நெரிசலைக் குறைப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திலிருந்து செல்லக்கூடிய பேருந்துகள் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல் நசரத்பேட்டை வழியாக வெளிச்சுற்று சாலையில் வண்டலூர் வழியாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். அதேபோல ஊரப்பாக்கம் பகுதியில் சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கார்கள் உட்பட மற்ற வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் மாற்றுப் பாதையில் சென்றால் நெரிசல் குறைவாக இருக்கும். தாம்பரம், பெருங்களத்தூர் செல்வதைத் தவிர்த்து ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகச் சென்றால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம்.
அதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு மக்கள் வருவதற்காக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்ற ஆண்டு 20,185 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தாண்டு 24,708 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.சுங்கச்சாவடிகளில் நெரிசல்களைக் குறைக்க 24 மணிநேரமும் கண்காணிப்புக்காக போக்குவரத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்காக தனி வரிசையும் ஏற்படுத்தப்படும்" என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT