Published : 31 Jan 2019 03:52 PM
Last Updated : 31 Jan 2019 03:52 PM

ஆய்வுக் கட்டுரைகளோடு நிற்காமல் ஆராய்ச்சிகள் விவசாயிகளுக்கு பயன்பட வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை

ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குப் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும். கட்டுரைகளோடு நின்று விடக்கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தினார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் 28-வது தேசியக் கருத்தரங்கம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது.

மூன்று நாட்கள் நடக்கும் இந்தக் கருத்தரங்கில், நாட்டில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்க உள்ளனர். இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு சிறந்த விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:

''தற்போது காலநிலை மாற்றம், காலம் தவறிப் பெய்யும் மழை ஆகியவை விவசாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளன. இதனை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். நீர் வளங்களை நிர்வகிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் காலநிலையானது தற்போது வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் மாற்றம் அடைந்துள்ளது. ஆனால், இன்றைய சூழலில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு தொழில் நுட்பமானது விவசாயிகளால் எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

அதிகரித்து வரும் மக்கள் தொகை, பொருளதார வளர்ச்சி, அதிகரிக்கும் நுகர்வு மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயத்திற்கும் பெரும் சவாலாக உள்ளது. கடந்த காலங்களில் மழை பொய்த்தால், விவசாயம் பாதிக்கப்படும். இதனால், கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்ய முடியாமல் போனது. தற்போது சொட்டு நீர் பாசனம் மூலம் அனைத்து காலங்களிலும் விவசாயிகள் பயிர் செய்கின்றனர். இதுபோன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விவசாயிகள் தங்களது நிலங்களின் தன்மை குறித்து முறையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப பயிர் செய்ய வேண்டும். விவசாயிகள், ஆராய்ச்சி மையங்களுக்குச் சென்று தங்களது நிலத்தின் மண்ணைப் பரிசோதித்து, அதில் எந்தப் பயிர் பயிரிடலாம் என்பதைக் கேட்டறிந்து, அதன் பின் பயிர் செய்ய வேண்டும்.

இந்தியாவின் தேவைக்கேற்ப வேளாண் உற்பத்தி அதிகரிக்க தொழில் நுட்பங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சிறந்த தொழில்நுட்பங்களைத் தேர்வு செய்து, அதனை அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த ஆய்வுக்கட்டுரைகள், கருத்தரங்கோடு மட்டும் நின்று போய்விடாமல், விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும்".

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x