Last Updated : 14 Jan, 2019 05:37 PM

 

Published : 14 Jan 2019 05:37 PM
Last Updated : 14 Jan 2019 05:37 PM

சூதாடுவதற்காக தாய், மகள் கொலை செய்த உறவினர்: 4 ஆண்டுகளுக்குப் பின் கைது

சூதாடுவதற்காக தாய், மகளை கொலை செய்த உறவினர்  4 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 22 சவரன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு உதவியவரும் பிடிபட்டார்.

புதுச்சேரி வில்லியனூர் அரும்பார்த்தபுரம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவரான தமிழ்செல்வி. இவர், அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் அருகே மருத்துவமனை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (57) என்பவர், சிகிச்சைக்காக தமிழ்செல்வியின் மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதன்படி 12ம் தேதி (சனிக்கிழமை) இரவு ஆறுமுகம் கை வலிப்பதாக கூறி, தமிழ்செல்வியின் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

தமிழ்செல்வி சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, மருத்துவமனையில் யாரும் இல்லாதை உறுதி செய்து கொண்ட ஆறுமுகம் அங்கிருந்த மின்சார ஒயர் ஒன்றினால் தமிழ்செல்வியின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதனால் கழுத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு தமிழ்செல்வி மயங்கி விழுந்துள்ளார். தமிழ்செல்வி இறந்து விட்டதாக கருதி ஆறுமுகம், அவர் அணிந்திருந்த 7 சவரன் நகைகளை கழற்றிக் கொண்டு தப்பினார்.

இந்நிலையில் தமிழ்செல்வியின் உறவினர்கள் அவரது மொபைல்போனில் அழைத்துள்ளனர். மொபைல்போன் எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை வந்து பார்த்தபோது, தமிழ்செல்வி கழுத்து அறுபட்ட நிலையில், உயிருக்கு போராடி மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து எஸ்பி ஜிந்தா கோதண்டராமன், தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வியிடம் நடத்திய விசாரணையில், தன்னை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்து நகைகளை பறித்து சென்றது அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. போலீஸார் உடனடியாக  ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது மேலும் பல கொலை சம்பவங்களில் அவர் தொடர்பு இருந்தது தெரியவந்தது. கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த முத்தியால்பேட்டை கணபதி நகரைச் சேர்ந்த கலைவாணியை கொன்று 50 சவரன் நகைகளை ஆறுமுகம் திருடி சென்றுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி, மூலக்குளத்தில் வசித்து வந்த கொலை செய்யப்பட்ட கலைவாணியின் தாய் கிருஷ்ணவேணியையும் கொன்று நகைகளை கொள்ளையடித்தது ஆறுமுகம் தான் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. ஆறுமுகம் கலைவாணியின் அக்கா மகளை திருமணம் செய்திருந்ததும் போலீஸார் விசாரணையில் தெரிந்தது.

இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், "ஆறுமுகத்திடம் நடந்த தொடர் விசாரணையில், அடிக்கடி சென்னைக்கு சென்று சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சூதாட்டத்திற்கு பணம் தேவை என்பதால், நகை பணத்தை கொள்ளையடித்து, பெண்களை கொலை செய்து வந்தது தெரியவந்தது. தற்போது நடத்திய விசாரணை அடிப்படையில் மூலக்குளத்தில் வசித்த வந்த கலைவாணியின் தாய் கிருஷ்ணவேணி, தூக்கில் பிணமாக தொங்கியதையடுத்து போலீஸார் இந்த சம்பவத்தை தற்கொலை என பதிவு செய்தனர்.

தற்போது அவர் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளதால் இந்த வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை கலைவாணியை கொலை செய்தது, ஆறுமுகம் என தெரியவந்ததையடுத்து காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையிலான போலீஸார் ஆறுமுகத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

தற்போது மருத்துவர் தமிழ்செல்வியிடமும், கிருஷ்ணவேணியிடமும் கொள்ளையடிக்கப்பட்ட 22 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகமும், அவரிடமிருந்த நகைகளை விற்க உதவி செய்த கருவடிக்குப்பத்தை சார்ந்த சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டனர்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x