Published : 03 Jan 2019 09:36 AM
Last Updated : 03 Jan 2019 09:36 AM
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டிசம்பர் 30, 31 தேதிகளில் டாஸ்மாக் வருமானம் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாட்களில் மட்டும் ரூ.243 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மட்டும் டிசம்பர் 31-ம் தேதி மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.130 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி டாஸ்மாக்கில் மதுவகைகள் ரூ.90.97 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி இருந்த நிலையில், 2018, டிசம்பர் 30-ம் தேதி அதிகரித்து ரூ.113 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி டாஸ்மாக் மது வகைகள் விற்பனை ரூ.139.55 கோடியாக இருந்த நிலையில், 2018, டிசம்பர் 31-ம் தேதி ரூ.130 கோடியாக இருந்தது.
ஆனால், டிசம்பர் 30, 31-ம்தேதி இரு நாட்களில் கணக்கிடும்போது இந்த ஆண்டு ரூ.243 கோடிக்கு மது விற்பனை அதிகரித்துள்ளது. இது கடந்த 2017-ம் ஆண்டில் கடைசி இரு நாட்களில் ரூ.230.52 கோடியாக மட்டுமே இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடைசி இரு நாட்களில் டாஸ்மாக்கில் விற்பனை(ஐஎம்எப்எஸ்) 3 லட்சத்து 65 ஆயிரத்து 44 பெட்டிகள் விற்பனையாகின, ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 542 பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனையாகின.
இது 2016-ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தின் கடைசி இரு நாட்களில் டாஸ்மாக்கில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 22ஆயிரத்து 127 பெட்டி மதுவகைகள் விற்பனையாகி இருந்தன. ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 944 பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனையாகி இருந்தன.
2015-ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தின் கடைசி இரு நாட்களில் டாஸ்மாக்கில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 6 ஆயிரத்து 23 மதுப் பெட்டிகள் விற்பனையாகின. பீர் வகைகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 184 பெட்டிகள் விற்பனையாகின.
இது குறித்து டாஸ்மாக்கின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தின் போது மதுவகைகள் விற்பனை குறைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் புத்தாண்டு பிறப்பு என்பது ஞாயிற்றுக்கிழமை வந்தது, அதற்கு முந்தைய ஆண்டு சனிக்கிழமை புத்தாண்டு பிறந்தது. வாரக்கடைசி என்பதால், மதுவகைகள் விற்பனை உச்சத்தில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு புத்தாண்டு வார நாட்களில் பிறந்ததால் விற்பனை சற்று குறைந்தது” எனத் தெரிவித்தார்
டாஸ்மாக்கில் உள்ள மற்றொரு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சென்னையில் பல்வேறு இடங்களில் போலீஸார் கெடுபிடிகளையும், கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியதால், ஏராளமானோர் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனாலும், டாஸ்மாக் விற்பனை சென்னை மண்டலத்தில் குறைந்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் டிசம்பர் 31-ம்தேதி மட்டும் ரூ.34.80 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. 2017-ல் ரூ.36.9 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT