Published : 05 Jan 2019 11:00 AM
Last Updated : 05 Jan 2019 11:00 AM

நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம்; சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன்- கவுசல்யா

நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம் என்றும் சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் ஆணவக்கொலை எதிர்ப்பாளர் கவுசல்யா தெரிவித்துள்ளார்.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் - பழநி கவுசல்யா ஆகிய இருவரும் காதலித்து 2015-ல்சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டையில் சங்கர் கடந்த 2016 மார்ச் 31-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, தீண்டாமை, ஆணவப் படுகொலைக்கு எதிராக கவுசல்யா போராடி வந்தார்.

 

இந்த நிலையில், கோவையில் ‘நிமிர்வு கலையகம்’ என்ற பறை இசை பயிற்சி அமைப்பின் பொறுப்பாளர் சக்தி என்பவரை கவுசல்யா காதலித்து கடந்த டிசம்பர் 9-ம் தேதி மறுமணம் செய்துகொண்டார்.

 

அதைத் தொடர்ந்து, வேறொரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றியது உட்பட சக்தி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், சக்தி மீதான புகார்கள் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

 

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ''ஒரு பெண்ணைக் காதலித்து கைவிட்டதை சக்தி ஒப்புக்கொண்டார். ஆனால், மற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டார். கவுசல்யாவும் தனது தவறைப் புரிந்துகொண்டார். எனவே, அவர்கள் இருவரும் பொது அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும். நிமிர்வு கலையகத்தில் இருந்து சக்தி வெளியேற வேண்டும். ரூ.3 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் அவர் பறை இசைக்கக் கூடாது'' என்று தெரிவித்தனர்.

 

இது பலத்த சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. கவுசல்யா தனது ஃபேஸ்புக் பதிவில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மட்டும் ஏற்பதாகத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்க ’இந்து தமிழ் திசை’ இணையதளம் சார்பில் கவுசல்யாவைத் தொடர்பு கொண்டோம்.

 

அப்போது பேசிய அவர், ''இதுகுறித்துப் பேச நான் விரும்பவில்லை. பிம்பமாக என்னை நினைத்து என் பின்னால் நின்றிருந்தால், நிச்சயம் வேண்டாம். ஆணவக் கொலைக்கு எதிராக, சாதி ஒழிப்புக்காக நிற்பேன். அதற்குத் துணை நிற்பவர்கள் இருந்தால் போதும்.

 

பிற்காலத்தில் எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றினால் விளக்கம் சொல்வேன். எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம்'' என்றார் கவுசல்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x