Last Updated : 21 Jan, 2019 09:30 AM

 

Published : 21 Jan 2019 09:30 AM
Last Updated : 21 Jan 2019 09:30 AM

பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?; உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த ‘செயலி’- வரும் 28-ல் அறிமுகம் செய்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை வாங்க மறுத்தாலோ, புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ பாதிக்கப்பட்டவர்கள் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதை கண்காணிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் சென்னையில் ஆங்காங்கே நடந்து வருகிறது. இவற்றை முற்றிலும் கட்டுப்படுத்தவும் குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்யவும் சென்னை முழுவதும் பொது இடங்களில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும் குற்ற நிகழ்வுகள் முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. இதுதொடர்பான புகார்களை போலீஸார் உடனடியாக பதிவு செய்வது இல்லை என்றும் பறிகொடுத்த நகை உள்ளிட்ட பொருட்களின் மதிப்பை குறைத்து காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சில நேரங்களில் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார்தாரர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், சென்னை காவல்துறை தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இதனை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வரும் 28-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளார். இதன்படி சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அளிக்கும் புகாரை போலீஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்தாலோ, நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ இந்த செயலியில் உடனடியாக பதிவு செய்யலாம். இதை சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களும் உடனுக்குடன் கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள். இவர்களை காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையிலான தனிப்படை கண்காணிக்கும்.

மேலும் நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் துரிதமாக செயல்படும் போலீஸாருக்கு பரிசு வழங்கி பாராட்டவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் முடிவு செய்துள்ளார்.

சிறப்பம்சங்கள்குற்ற நிகழ்வு நடந்த இடம், பறி கொடுத்த பொருளின் மதிப்பு உள்ளிட்ட தகவல்களை இந்த செயலியில் பதிவு செய்யலாம். வழக்கு நிலை குறித்த தற்போதைய நிலவரம் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். செல்போன் திருடு போயிருந்தால் ஐஎம்இஐ ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்தால் அது தற்போது எங்கு உள்ளது என்றும் அதில் வேறு சிம் கார்டை போட்டு பயன்படுத்தியிருந்தால் அந்த புதிய சிம் கார்டின் எண்ணும் போலீஸாருக்கு தெரிந்து விடும். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x