Published : 28 Sep 2014 08:49 AM
Last Updated : 28 Sep 2014 08:49 AM
தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் ஜெயலலிதா இழந் துள்ளார். இதனால் தமிழகத்தின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப் பது என்பது குறித்து அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி முடி வெடுக்கவேண்டும். அந்த முடிவை தமிழக ஆளுநரிடம் அவர்கள் அளிக்கவேண்டும். இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டபோது, “இதுபற்றி நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அனைவரும் அதிர்ச்சியில் உள்ளோம். எனினும் இது தொடர்பாக பொதுச்செயலாளர் விரைவில் கடிதம் அனுப்புவார். அதன்படியே அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்” என்றனர்.
இதற்கிடையே, அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் மூன்று அமைச்சர்களின் பெயர்கள் பலமாக அடிபடுகிறது. தற்போதைய அமைச்சரவையில் ஜெயலலி தாவுக்கு அடுத்த மூத்த அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பின்போது இடையிடையே வெளியே வந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வத்திடம்தான் பேசிவிட்டுச் சென்றார். இது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக அவர் தொடர்ந்து திகழ்வதையே காட்டுவதாக அதிமுக-வினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையே ஒரு இளம் அமைச்சர் உட்பட இரண்டு அமைச்சர்களின் பெயர்களும், முன்னாள் அரசு பெண் அதிகாரி ஒருவரின் பெயரும் முதல்வர் பதவிக்கு விவாதிக்கப்படுவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கே மீண்டும் முதல் வராகும் வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரங்களும், அமைச்சரவை வட்டாரங் களும் தெரிவித்தன. இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாவும் அவர்கள் கூறினர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிபோயுள்ள நிலையில் (வரும் 6-ம் தேதிக்குப் பிறகு அவர் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை கிடைக்காத பட்சத்தில்), ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அது பற்றிய அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம் வெளியிடும்.
இதற்கிடையே, தமிழகத்தில் எழுந்துள்ள புதிய சூழல் குறித்து சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதல்வரின் பதவி, நீதிமன்ற தீர்ப்பினால், ஆட்சிக்காலத்திலேயே பறிபோகும் நிலை உருவாகியிருக்கிறது. அதுபோன்ற நேரத்தில் என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளவேண்டும் என்பது பற்றி தெளிவான வழிகாட்டுதல் இல்லை. அதனால் நாங்கள் ஆலோசித்தே முடிவெடுப்போம்.
இதற்கு முன்பெல்லாம் முதல்வர் ராஜினாமா செய்யும்போது, தனது அமைச்சரவையையும் கலைத்துவிடும்படி கடிதம் கொடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலில் அமைச்சர்கள் ராஜினாமா செய்யத் தேவை ஏற்படாது என்றே எண்ணுகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT