Published : 10 Jan 2019 03:35 PM
Last Updated : 10 Jan 2019 03:35 PM
ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் ஏழைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே புதுச்சேரியிலும் அனைத்து தரப்பினருக்கும் பொங்கல் இலவச பரிசு பொருட்கள் வழங்க வேண்டுமென முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பியிருந்தார்.
ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அனைவருக்கும் தர மறுத்து, ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் இலவச பொருட்கள் வழங்க முடியும் என்று குறிப்பிட்டார். இதுதொடர்பாக அமைச்சரவை கூடி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் டெல்லிக்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சென்றுள்ளனர்.
இதனால் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் புதுச்சேரியில் பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பொங்கல் இலவச பரிசு தொகை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்த செய்திகளை தனது வாட்ஸ் அப்பில் கிரண்பேடி பகிர்ந்து வருகிறார்.
அத்துடன் இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "பொதுமக்களின் வரிப்பணத்தில் பரிசு வழங்கப்படுகிறது. இது ஏழை மக்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். பொங்கல் இலவச பொருட்கள் ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் என குறிப்பிடவில்லை. இதைத்தான் நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி கூறி வருகிறேன்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே ஏழைகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT